வித்தியாசமான சில அனுபவங்கள் நெஞ்சின் படிமங்களாகி விடும் .பகிர்ந்து கொள்ள தகுந்த ரசனைகள் அடிமன ஊவாக்களாகி இம்சித்துக் கொண்டிருக்கும் ஒரு பகிர்தல் வரை .அப்படிப்பட்ட ஒரு இன்ப பகிர்தல்கள்தான் …முகநூலை நிரப்பியிருக்கும் பாகுபலி விமர்சனங்கள் .எங்கே பார்த்தாலும் பாகுபலி விமர்சனங்கள் . இதில் நானும் சேருவதற்கென இல்லை …என் சில  இள மனது வாசிப்பு  புனைவுகளின் கண் காணலை தோழமைகளுடன் பகிர்ந்து கொள்ளும் ஓர் உந்துதல் இப்பதிவு .அவ்வளவே .

அரச கதைகளை வாசிக்கும் ஆரம்ப குழந்தை பருவத்தில் பெரிய பெரிய பாராக்களாக எழுதப்படும் வர்ணனைகள் எரிச்சலூட்டுவதாக இருக்கும் .அவற்றை கடந்து அடுத்தடுத்த பக்கங்களை திருப்பி விடுவேன் . சில வயது முதிர்தலின் பின்னே , கதைகளை மட்டும் கவனிக்கும் தன்மை குறைந்த பின்னே , அந்த பெரிய பாராக்களில் கவனம் சென்றது .வாசிக்கப்பட்ட பாராக்கள் புது உலகினை அறிமுகப்படுத்தின .கற்பனைகளின் கைபிடியில் எனை ஒப்புக் கொடுத்த காலகட்டங்கள் அவை .மனதும் , அறிவும் விசாலமாக தொடங்கியதும் அவ்விடத்தில்தான் .தேடல்கள் ஆரம்பமானதும் அங்கிருந்துதான் .

அப்படி தேடி தேடி படித்த ராஜ கதைகளின் இளவரச ,இளவரசிகள் கம்பீரமாக இருந்தனர் .வலிமையாக வாள் சுழற்றினார்கள்.கதாசிரியர்ககளின்  கற்பனை  தோட்டங்களில்  எண்ணம் போல் வண்ணங்களாய் , நிறங்களாய் பூத்தனர் .அப்பூக்களின் நிறமும் , வடிவும் , வலிவும் என் கற்பனையில் தீர்மானிக்கப்பட்டது .அது போலொரு கற்பனை சரித்திர கதை …கற்பனையில் மட்டுமே மனதினுள் மட்டுமே விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருந்த்து …அச்சு பிசகாமல் , இம்மி விலகாமல் கண் முன் பிரம்மாண்டமாக நிகழ என்ன செய்யவேண்டும் .

பாகுபலி பார்க்கவேண்டும் .

வெள்ளை சலவை கற்களால் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட அரண்மனை , ராஜ தர்பார் நடக்கும் அரசவை , பறக்கும் பெரிய அன்ன  கப்பல் , வானுயர சிலைகள் , யானையேற்றும் நாண் , அநாயசமாக மரம் மேல் உறங்கும் , யானை மேல் ஏறும் ஆண்மை  ராஜகுமாரன் , தன்மானம் மிக்க ,அடக்குதலுக்கு தலை குனியாத கம்பீர ராஜகுமாரி , விழியசைவில் நாட்டையே தர்ம  வழி நடத்தும் ராஜமாதா , உடல் ஊனத்தால்,  உள்ள ஊனமான அவளது கணவன் , பதவி ஆசை இளையோன் , ராஜ விசுவாச ஊழியன் …என எல்லாம் ,எல்லாமே …நாம் படித்த சரித்திர நாவல்களின் பிரம்மாண்டங்கள் எல்லாமே திரையில் நம் கண் முன்னே விரிகின்றன .

இந்த மாபெரும் உழைப்பிற்கு , இடைவிடாத மெனக்கெடலுக்கு ஒரு தலை வணங்கல் நிச்சயம் தேவை .அதை நிறை மனதுடன் அளிப்போம் .

கதையென்று பார்த்தால் எத்தனையோ சரித்திரங்களில் வாசித்த , கேள்விப்பட்ட பழைய புளித்த தோசை மாவுதான் .ஆனால் அதில் நவீனங்களை உட்புகுத்தி புதிய அனுபவங்களை நெடுக தெளித்து புத்தம் புதிதென்ற நம்புதலுடன்   வித விதமான பட்சணங்களை நா ருசியோடு அளித்திருக்கும் ராஜமௌலியின் யுக்தி பிரமிக்க வைக்கிறது .கதை ஒன்றுதான் .அது அநேகமாக மகாபாரத , ராமாயண தாக்குதலுள்ளதாகத்தான் இருக்கும்.அதனை விதம் விதமாக பாணி மாற்றி படைப்பதில்தான் ஒரு படைப்பாளி பேசப்படுகிறான் .ராஜமௌலி சந்தேகமின்றி சிறந்த படைப்பாளி .

பிரபாஸ் வாழ்வின் மைல்கல் இந்த படம் .இனி ஒரு படம் இது போல் அமையபோவதில்லை .இந்த ஒரு படமே அவரது திரை வாழ்வின் இறுதிவரை போதும் . மெலிந்து அழகான , கம்பீர அனுஷ்கா .வேறொருவரை இந்த கேரக்டரில் வைக்கமுடியவில்லை .நான் விளை பொருளா …என பொங்குவதாகட்டும் , வளை பூட்டில் ராஜமாதாவிடமே கம்பீரமாய் எதிர் பேச்சு பேசுவதாகட்டும்  , இறுதி காட்சியில் வெட்டுப்பட்ட தலையுடன் நடந்து வருவதாகட்டும் அப்படியே ஒரு வீர ராஜகுமாரிதான் .

ராஜமாதா ரம்யாவிற்கு போன பாகத்தை விட குறைவான வேலைதான் .ஆனாலும் அந்த கம்பீரமே போதுமே .இங்கே ஒரு நெருடல் .இத்துணை ஆளுமையும் , ஆட்படுத்துதலுமாய் இருக்கும் பெண் சிங்கம் …இப்படியா எளிதாக ஒரு சிறு சூழ்ச்சியில்  ஏமாந்து போகும் …? இதன் காரணத்தை தாய் பாசமென கொள்ளலாமா …? ஆனால் அதே பாசம்தானே பாலூட்டி வளர்த்த பிள்ளையிடமும் ….

இயல்பாக உடனடியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய பாத்திரங்கள் நாசரும் , ரானாவும் .( திருதராஷ்டிரன் – துரியோதனன் ) சிறு ஊனத்திற்காய் தனக்கு மறுக்கப்படும் அரச பதவி , பூரண தகுதியிருந்தும் மகனுக்கும் மறுக்கப்பட இயலாமையும் , கோபமுமாக குமுறும் சாதாரண தந்தை .அழகான நடிப்பு .

மக்களுடன் மக்களாக இறங்கி பழகும் ஒரு குணம் தவிர மற்றபடி தம்பியின் அனைத்து தகுதிகளும் தானும் பெற்றிருந்தும் …அரியணை மறுக்கப்பட  அங்கே கோபம் , பழி வாங்கல் தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும்…அந்த இயலாமை உணர்வுகளை ரானா அப்படியே பிரதிபலித்திருக்கிறார் .

அந்தக் காலத்தில் ராஜாக்களுக்கென்றே , மறுபேச்சு பேசாமல் அவர்கள் வாய் வார்த்தைகளை செயல்பாடுகளாக்கும் ஊழியர்கள் இருந்தார்களாம் .அப்படி ஒரு வேடம் சத்யராஜுக்கு .வேறு யாரையும் அந்த பாத்திரத்திற்கு நினைத்து பார்க்கவும் முடியவில்லை .( மனுசன் மன்னிப்பு என்ன அழகாக கேட்டாருப்பா .அந்த நேர்த்திக்காகவே கட்டப்பாவை திரும்ப திரும்ப பார்த்து ரசிக்கலாம் )

இரண்டு வருட இந்த உருவாக்கலின் தாக்கத்திலிருந்து இந்த கலைஞர்கள் வெளி வருவதே சிறிது கடினம்தானென நினைக்கிறேன் .பார்த்த நமக்கும்தான் …அந்த சரித்திர காலத்தை விட்டு வருவது கடினமாகத்தான் இருக்கிறது .

தலை மேல் அக்னிசட்டி , ராஜகுல மங்கையின் அடிப்பிரதட்சனம் …அருமையான கற்பனை .அந்த இரண்டு காட்சிகளுமே …இரண்டு பெண்களுமே அமர்களப்படுத்தி விட்டனர் .

பெண்ணை சீண்டுபவனின் கைவிரலை வெட்டக்கூடாது …சொன்ன நொடியோடு படாரென திரும்பி ,சடாரென அவன் தலையை சீவுவது…ஆஹா .கைதட்டி , விசிலடிக்க தூண்டிய காட்சி அது .இது போலொரு தண்டனை இப்போதும் அமுலில் இருக்க வேண்டும் என ஒரு ஏக்கம் மனம் முழுவதும் .

கொள்ளையர்களின் கொட்டத்தை அடக்க அணைக்கட்டை திறந்து விட , ஆர்ப்பரித்து பரவும் நீரோடு மனதும் சங்கடப்பட்டு கத்துகிறது .அடப்பாவி …இந்த தண்ணீர் பஞ்சத்தில் இப்படி தண்ணீரை வீணாக்குகிறீர்களே என …இது எனக்கு மட்டும்தானா …?

நுரைத்து தள்ளி , ததும்பும் தண்ணீருக்குள் ராஜ்ஜியம் அசைந்து கிடக்க , ராஜகுமாரியின் பயணத்திற்கு கொண்டு வரப்படும் அன்ன படகிலேற …காதலிக்கு காதலனின் தோள் நடைமேடையாகிறது .காதலின் ஆழ்மையை அழகாக காட்டிய இடம் அது .காதலுக்கான ஒரே காட்சிப்படுத்தல் இடமும் அது மட்டும்தான் .தீரமும் , செறிவும் பிரம்மாண்டமாக காட்டப்பட வேண்டிய இடத்தில் காதலுக்கான ஒதுக்குதல்கள் மிகவும் கொஞ்சமே .

மொத்தத்தில் பாகுபலி ….நிறைய பிசிறல்கள் விரவி கிடந்தாலும் உழைப்பிற்கும் , புனைவிற்கும் , மெனக்கெடல்களுக்கும் , ஆங்கில படங்களுக்கு தைரியமாக விட்ட சவாலுக்கும் என ஒவ்வொரு இந்தியனும் பெருமிதமாய் சொல்லிக் கொள்ளும் படம் .

Leave a comment

LEAVE A REPLY