மீண்டும் பிறந்து வா …பாரதீதீதீதீ ….

 

பாரதிக்கு ஒரு எளிய வாழ்த்து …

 

குளிர் தோய்ந்திருந்த என் மாலை பொழுதுகள்
பெரும்பாலும் உன்னுடனேயே கழிந்திருக்கின்றன
பிறிதொருநாள் பார்த்து கொள்வோமென நீ
விட்டுச் சென்ற கவிகளோடும் , கருக்களோடும் ,
கட்டுக்கு சேராத சுள்ளியாய்
தனித்தலையும் சொற்கள் சில
பிந்தி நான் வந்ததாய்
உன் பெயர் சொல்லி புகாரளிக்கின்றன,
ஏகாந்தங்களுக்களுக்குள் எப்போதும் உனை மட்டுமே
கூட்டி சென்றிருக்கிறேன் ,
சந்திரனை சாட்சியாக்கி உனை நான்
எனக்கென சமைத்த பொழுதுகள் அவை ,
கண்ணன் பாட்டு படிக்கையிலெல்லாம்
கோபிகை ஒருத்தி தயிர் கடைகிறாள் ,
தீக்குள் விரல் வைத்துவிட்டு
நெஞ்சு குளிர நான் பட்ட பாடு ..அப்பப்பா …
துச்சாதனன் கை சுட்ட பாஞ்சாலி சேலை தலைப்புற்குள்ளிருந்து
இப்போதும் உருண்டுகொண்டுதானிருக்கின்றன
பரங்கியர் தலைகள் ,
பண்ணால் கண்ணம்மாவை நீ ஆராதித்தாயோ என்னவோ
உன்னால் அவளை நான் நித்தமும் காதலித்து கொண்டிருக்கிறேன் ,
சாஸ்திரங்களை சாகடித்துவிட்டு
பத்திரங்கள் சொல்லிவிட்டு
பெண்மையை ஏற்றிவிட்டு
சுளுவாய் நீ மறைந்துவிட்டாய் ,
உன்
கருத்துக்களை சொல்லிக்கொண்டு
கவிதைகளை பாடிக்கொண்டு
நாங்கள் …இன்னமும்
நீ விட்டு சென்ற அதே இடத்தில்தான்
நின்றுகொண்டிருக்கிறோம் .
விரைவில்
மீண்டும் பிறந்து வா …பாரதீதீதீதீ ….

Leave a comment

LEAVE A REPLY