விஜய் சேதுபதியை ஆக்சன் அந்தஸ்திற்கு உயர்த்தியுள்ள படம் .ஆக்சன் ஹீரோ என்பதற்காக ,எப்போதும் மீசையை முறுக்கியபடி ,முள்ளின் மேல் இருப்பது போன்ற முகத்துடனேயே இல்லாமல் சாதாரண குடும்ப தலைவனாக , மனைவி இரண்டு குழந்தைகளுடனான சாதாரண குடும்பஸ்தனாக ஹீரோவை காட்டியிருப்பது வித்தியாசம் .

ஒரு அதிரடி சண்டைக்காடசியிலோ , பிரம்மாண்டமான செட்டிங்குகளின் நடுவே பாடலுடனோ ஹீரோவின் அறிமுகம் கிடையாது . கிடைத்திருக்கும் பிணத்தை பற்றி இவரிடம் கூற சப் இன்ஸ்பெக்டர் இவருக்கு போன் செய்ய ,இவரோ ஒரு பயங்கர சண்டை காட்சியில் இருக்கிறார் .மகன் , மகள் ,மனைவியுடன் விளையாட்டாய் வீட்டிற்குள் ஒரு சண்டை .மேலே விழுந்து பிராண்டும் மகனையும் , மகளையும் சமாளித்தபடி போனில் பிணத்தை பற்றி பேசிவிட்டு , இப்ப வாடா என மகனின் மேல் மீண்டும் பாய்கிறார் .இதுதான் ஹீரோ அறிமுக காட்சி .

இதுபோல் வித்தியாசமான காட்சிகள் படம் நெடுக வருகிறது .இடையில் வழக்கமான மசாலாத்தனத்துடன் ஆக்‌ஷன் , த்ரில்லர் கலந்த அரசியல்வாதி மோதல் . அதனை கூறும் விதத்திலும் வித்தியாசம் காட்ட முயன்றிருக்கிறார் டைரக்டர் .ஆனாலும் ஏனோ பல படங்களில் பார்த்த காட்சிகளை அவை நினைவு படுத்துவதில் சிறு அலுப்பு .

சிறு பையனை ஸ்டேசனில் வைத்து சுட்ட வழக்கில் சஸ்பென்ட் செய்யப்பட்டு , அரெஸ்ட் நிலைமையில் இருப்பவர் , வீட்டினுள் கொஞ்சம் தண்ணீரை மகன் சிந்திவிட்டு அப்பாவின் இறுக்க முகத்தை பார்த்து விட்டு சாரி கேட்க , சட்டென மாறி பக்கெட் பக்கெட்டாக தண்ணீரை வீட்டினுள் கொட்டி மனைவி , பிள்ளைகளுடன் குத்தாட்டம் போடுகிறார் .

ஆபிஸில் ஆயிரம் டென்சன் எனக்கு , இதில் உங்களை வேறு உள்ளே வந்த்தும் சேவிக்கனுமா …? என வீட்டினுள் நுழையும் போதே முகத்தை உர்ராங்குட்டான் போல் வைத்துக்கொள்ளும் ஆண்கள் கவனிக்க …

அரசியல்வாதியின் அடியாட்கள் ஹீரோவை ஒரு வழி பண்ணும் எண்ணத்தில் ஸ்டேசனில் அறைக்கு வெளியே காத்திருக்க , இவர் உள்ளே காலையில் சண்டை போட்டு வந்த மனைவியை சமாளிக்க போனில் தன்னைத் தானே செல்பி எடுத்து அதனை மனைவிக்கு அனுப்பி கொஞ்சிக் கொண்டிருக்கிறார் . பிறகு வெளியே வந்து ரவுடிகளை கவனிக்காத்து போல் வெளியே போய் அந்த அரசியல்வாதியையே கைது பண்ணி ஸ்டேசனில் கொண்டு வந்து வைத்துவிட்டு இப்போ சொல்லுங்க என்ன விசயம் ..? என்கிறார் ரவுடிகளிடம் நிதானமாக …

பழக்கமான காட்சிகளில் இது போல் வித்தியாசங்களை புகுத்தியிருக்கும் டைரக்டருக்கு சபாஷ் .

படத்தில் ஒரு காட்சி .அடிக்கடி மோதிக் கொள்ளும் கணவனும் , மனைவியும் ஊடலுடன் பேசாமல் இருக்க, மனைவியை கெஞ்சி , கொஞ்சி சமாளிக்க முயற்சித்த ஹூரோ , தொடர்ந்து அவர் முறுக்கிக் கொள்ள ” ஏய் என்னடி ரொம்ப பண்ற …? திட்டினது தப்புதான் .அதுக்காக என்ன கால்ல விழ சொல்றியா …? என்க , மனைவி ” ஆமாம் காலில் விழு ” என்க , கரண்டியை கீழே தள்ளி அதை எடுப்பது போல் லேசாக மனைவியின் பாதம் தீண்டி எழுந்தவரை ” இந்த சூரிய வம்சம் கதையெல்லாம் வேண்டாம் .ஒழுங்காக கால்ல விழு ” என கால்களை நீட்டி வைத்துக் கொள்கிறார் .ஹீரோ குனிந்து மனைவியின் கால்களை தொட்டு மன்னிப்பு வேண்டுகிறார் .இது போல் காடசி வேறு படத்தில் பார்த்த நினைவில்லை .”புதிய பாதை”  படத்தில் தனது வாழ்வை மாற்றியதற்காக நன்றி சொல்லும் விதமாக மனைவியின் கால்களை கணவன் வணங்குவது போல் ஒர் காட்சி பார்த்திபன் வைத்திருப்பார் .அதன்பிறகு இந்த படத்தில்தான் வருகிறது என்று நினைக்கிறேன் .

காதல் , குடும்பம் , குழந்தை , ஆக்‌ஷன் , திரில்லர் என எல்லா காட்சிகளிலும் வித்தியாசம் காட்டியிருக்கும் இந்த படம் விஜய் சேதுபதியை சுலபமாக ஆக்‌ஷன் ஹீரோவாக்கியிருக்கிறது .

விஜய் சேதுபதி …வித்தியாச சேதுபதி ….சூப்பர் .

Leave a comment

LEAVE A REPLY