தமிழின் முதல் ஜாம்பி டைப் படமென்று விளம்பரப்படுத்தியுள்ளனர் .” ஜாம்பி …” என்றால் பிணம்தானே …வைரஸ் தொற்றினால் மிருகம் போல் மாறும் மனிதர்களை எப்படி ஜாம்பி என்று அழைக்க முடியும் ..?

கண்டவுடன் சுட உத்தரவு கொடுத்த கவர்ன்மென்ட் பிறகு எங்கே போனது …?

எத்தனையோ போலீஸ் போர்ஸ் இருக்கையில் , சாதாரண எஸ் . ஐ யான ஜெயம் ரவியை லஷ்மி மேனன் , தங்களை கோயம்புத்தூர் கொண்டு சென்று சேர்க்க தேர்ந்தெடுப்பது ஏன் …? இதில் அவரது தந்தை பெரிய அரசியல்வாதி வேறு …அவரும் போலீஸை தேடாமல் ,தொண்டர்களை சேர்க்கிறார் . பாதுகாக்க வரும் தொண்டர்கள் எல்லாரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மிருகங்களாகி இவர்களையே விரட்ட ஆரம்பிக்கின்றனர் .

சிற்றெறும்பு கூட்டமாய் வரும் மிருக மனிதர்களை ரவி ஒரு ஆளாக நின்று எதிர்க்கிறாராம் .இரண்டு கைகளிலும் துப்பாக்கியை வைத்து சுடுகிறார் . கட்டையால் அடிக்கிறார் …என்னங்கப்பா ஒத்துக்கொள்ள முடியாத ஹீரோயிசம் .மற்றவர்கள் மேல் பாய்ந்து உடனே கழுத்தை கடிக்கும் மிருகங்கள் , ஹீரோவை மட்டும் சுற்றி …சுற்றி வருகின்றன  கிளைமேக்ஸ் வரை …கிளைமேக்ஸ் ஸில் ஒன்றாக சேர்ந்து கடித்து குதறுகின்றன .

தண்ணீர் அந்த மிருகங்களுக்கு அலர்ஜி என்பதை கண்டுகொண்ட பின்னும் , அதற்கேற்றாற் போல் எந்த நடவடிக்கையும் யாரும் எடுக்காதது ஏன் …? கடைசியில் திடீரென அந்த விசயம் நினைவு வந்து , பயர் என்ஜினை ஆன் செய்து தண்ணீரை தெளித்தபடி ஒவ்வொருவராக ஹீரோ ரிசர்ச் சென்டருக்குள் கொண்டு சேர்க்க ,தண்ணீர் காலியான போது ஹீரோயின் தனியாக மாட்டிக்கொள்ள …அவரை காப்பாற்ற ஹீரோ தன்னை பணயம் வைக்க …கொஞ்சம் கொஞ்சமாக மிருகமாகிக் கொண்டிருக்கும் அவரை என்னை ஏன் காப்பாற்றினாய் …? என சட்டையை பிடித்து உலுக்குகிறார் ஹீரோயின் .

லஷ்மி மேன்னின் கழுத்தில் தெறித்து விழுந்த ரத்தத்தை தனது நாக்கினால்  நக்கிவிட்டு மாறி வரும் முகத்தினை கட்டுப்படுத்தியபடி போ …போய்விடு என ரவி கத்தும் கிளைமேக்ஸ் கடிவெறி அடக்கி காதல் உணர்த்தும் இடம் …ம் …ம்ம்ம்….வித்தியாசம் .

இதே போல் மனதை தொடும் மற்றொரு இடம் …மிருக கடி வாங்கிய தங்கையை யாரும் சுட்டு விடாதீர்கள் என பதறி தங்கையை  அணைத்தபடி ரவி  தனியாக சென்று பூட்டிக்கொள்கிறார் .நான் மாறும் முன் என்னை சுட்டு விடு அண்ணா என்கிறார் தங்கை ….சென்ட்டிமென்ட் .இருந்தும் இந்த இடத்தில் முதலில் லஷ்மி மேனன் வேண்டாமென்று சொல்ல சொல்ல ரவி எதிர்ப்படும் மிருக மனிதர்களையெல்லாம் சுட்டு தள்ளும் காட்சி நினைவு வருகிறது .

நண்பனின் காலில் கடி தடம் தெரிய , அவர் தனது சாக்ஸை சுழட்டியபடி ” டேய் என்னை கடித்திருந்தால் சுட்டுடாதடா …ஏதாவது ஊசி போட்டு மயக்கத்தில் வச்சிரு….என்று அழுகை வர கூறுவது நெகிழ்ச்சி …

எல்லாரையும் செக் பண்ணி விரட்டும் தலைமை டாக்டரே தனது கீறலை மறைத்து வைத்து கடைசியில் மிருகமாவது …ம் …ஓ.கே .ஸ்ரீமன் காமெடி ஏனோ தானோ …சிரிப்பு வரவில்லை .

நிச்சயம் பண்ணிய மாப்பிள்ளையுடன் லஷ்மி மேனன் போனில் கொஞ்சி பேசியபடி வர , அதைக் கேட்டபடியே ரவி வெறுப்புடன் காரை ஸ்பீடு கூட்டிக்கொண்டே போக , நண்பர் எம்மா …நீ கொஞ்ச நேரம் போன் பேசாமல் வாம்மா …என்கிறார் .ஹீரோவின் ஒரு தலைக் காதல் .

அந்த மிருக மனிதர்களின் மேக்கப் உண்மையிலேயே பயமுறுத்துகிறது . பயமுறுத்தல் அங்கு மட்டும்தான் .முதலில் இருந்த படபடப்பு பிறகு காணாமல் போய் இவர்களை சாதாரணமாக பார்க்க வைத்துவிடுகிறது .

இசை முழுக்கவே இரைச்சல் . ஒரு அமானுஷ்ய தோற்றம் தர வேண்டுமென்ற நோக்கத்துடன் இசையமைக்கப்பட்ட முன்னாள் காதலி பாடல் …அநாவசிய எரிச்சல் .

படத்தின் இறுதியில் ரவி மிருகமாக மாறி காரின் மேல்  நின்றபடி உறுமுகிறார் .மிருதன் 2 …என எழுத்து வருகிறது .ஐய்யய்யோ …திரும்பவுமா …என்று ஒரு அலுப்பு நமக்குள் வருகிறது .இந்த படம் பாஸா …? பெயிலா …?

ரசிகர்கள் உள்ளத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு பிறகு அதனை பூர்த்தி செய்யாமல் விடுவது …இது நம் டைரக்டர்கள் புரொடியூசர்கள் வழக்கமாக இருக்கிறது .அது இந்த படத்திலும் ….

ஹாலிவுட் தர படமென்று கூறிக்கொண்டாலும் …. அதனருகில் கூட போக முடியவில்லையென்றாலும் ….தமிழுக்கு புதியதான இது போன்ற புது முயற்சிகளுக்கு கை கொடுக்க வேண்டுமென்ற எண்ணத்தில் மிருதனை ஒரே ஒரு முறை பார்க்கலாம் .

Leave a comment

LEAVE A REPLY