எதனால் என்று காரணம் சொல்ல முடியாமல் இவரை பிடித்து போனதால் , படம் சூப்பரென ஊடகங்கள் அலறியதால் , படத்தின் பாடல்கள் முன்பே உள்ளத்திற்குள் ஏறிக்கொண்டதால் …பொங்கல் ரிலீசில் முதலில் பார்த்த படம் ” ரஜினி முருகன் ” .

மிகுந்த எதிர்பார்ப்போடு போனாலும் நூற்றுக்கு ஐம்பதுதான் .ரொம்ப எதிர்பார்த்துவிட்டோமோ …? இல்லை படத்தில்தான் குறையா …? குழப்பம்தான் .

அடுத்தொரு நடிகரை காப்பி அடிப்பவர் மேல் பொதுவாக வெறுப்பு வரும் .சிலர் மட்டும் விதிவிலக்கு போலும் .ரஜினியை பின்பற்றிய விஜய் போல் …விஜயை பின்பற்றிய சிவா மேலும் வெறுப்பு … சிறு அதிருப்தி …ம்ஹூம் …மூச் .

சிவா …முழுமையான கதாநாயக அந்தஸ்திற்கு எப்போதோ வந்துவிட்டார் .ஆனால் அதனை இன்னும் அவர் உணராமல் ஒரு குழப்பத்திலேயே இருக்கிறார் .குழம்பாதீங்க சிவா .நீங்க இனி முழு ஹீரோவாகவே வலம் வரலாம் .காமெடி கலந்த ரஜினியின் ஆக்சனுடன் , விஜய்யின் அமர்க்கள நடனத்தையும் , நடிப்பையும்  இணைத்து வந்திருக்கும் நீங்கள் பெரிய ரவுண்டு வருவீர்கள் .தயங்காமல் இறங்கி கலக்குங்க .( டான்ஸ் என்னமா ஆடுறாருப்பா …) தனக்கு கொடுக்கப்பட்ட பங்கை நிறைவாக காமெடி , நடிப்பு , டான்ஸ் …தயங்கி தயங்கி கொஞ்சம் ஆக்சன் என கலக்குகிறார் சிவகார்த்திகேயன் .

கீர்த்தி முக ஜாடையில்  நிறைய …அம்மா. அந்த மச்சம் மட்டும் மைனஸ் .வழக்கமான தமிழ் பட மெழுகு பொம்மை ஹீரோயின் .பாவாடை , தாவணி …புடவை சுமாரான பெண்களையும் அழகாக காட்டிவிடும் .அதனால் அழகை பற்றி இப்போது சொல்லமுடியாது .நடிப்பையும் …இப்போது சொல்ல ஒன்றுமில்லை .அடுத்த படம் மிக கவனம் .கவர்ச்சியற்ற பாந்தமான அழகு மனதில் நிற்கிறது .

சூரி ..சிவாவுடன் இணைந்து காமெடியில் கலக்குகிறார் .” ரம்பா மாதிரி அடிக்கடி தொடையை காட்டாதே  தாத்தா ” ” நீங்களே காமெடி பண்ணிக்கிட்டீங்கன்னா ..அப்புறம் நான் எதுக்குடா ..?” ..” போன படத்தில் பார்த்திருப்ப ” போன்ற டைமிங் காமெடிகளில் நிற்கிறார் .

சமுத்திரகனி ..வில்லன் …ம் …ஏனோ மனதில் ஒட்டவில்லை .ஆனால் கொடுத்த வேலையை ஒழுங்காகத்தான் செய்திருக்கிறார் .இந்த கேரக்டரில் இவ்வளவுதான் முடியும் .

ராஜ்கிரண் பற்றி நடிப்பை ..கெட்டப்பை …கம்பீரத்தையும் சொல்ல வேண்டியதில்லை .தாத்தா வேடத்திலும் அசத்தல் …பழைய கம்பீரம் குறையாமல் .இதில் சிவாவோடு இணைந்து காமெடி வேறு …கலக்குகிறார் .

மூளைக்கு வேலை கொடுக்காமல் வெறுமனே பொழுது போக மட்டுமே குடும்பத்தோடு பார்க்க வேண்டுமானால் ….ரஜினி முருகன் போங்க .

Leave a comment

LEAVE A REPLY