சாதத்தில் பல்லி ..

முதல் அலாரத்தை ஆப் பண்ணிவிட்டு திரும்ப உறங்கியது தப்பு .பத்தாவது தடவையாக தனக்குள் புலம்பியபடி மணியை பார்த்தாள் சியாமளா .ஏழு மணிக்கு ஐந்து நிமிடங்கள் இருந்தன .ஏழரைக்குள் மூணு லஞ்ச்  பேக் பண்ணப்பட வேண்டும் . காலை டிபன் டேபிளுக்கு போக வேண்டும் . இன்னமும் பாதி வேலை கூட முடியவில்லை .தலை சுற்றியது அவளுக்கு .

” சியாம் டிபன் பேக் பண்ணிட்டியா …? ” உள்ளிருந்தே கத்தினான் வரதன் .

” அம்மா என் சாக்ஸை காணோம் …” அருண் கத்தினான் .

” அம்மா என் பென்சில் பாக்ஸ் எங்கே வச்சீங்க …? ” சுமதி கத்தினாள் .

சியாமளாவிற்கு தலையை பிய்த்துக் கொள்ளலாம் போலிருந்த்து .சமையல் , வீட்டு வேலைகளில் உதவ வேண்டாம் .இந்த குழந்தைகளையாவது கவனிக்கலாமல்லவா …?

வரதனை முறைத்தபடி  சாக்ஸையும் , கலர் பாக்ஸையும் தேட ஆரம்பித்தாள் .

” சாப்பிட வரலாமா ..? ” கண்ணாடி முன் நின்று டையை சரி செய்தபடி கேட்டான் வரதன் .

” கொஞ்சம் பொறுங்களேன் ” எரிந்து விழுந்தாள் .

” ஏய் எனக்கு நேரமாயிடுச்சுடி , இப்போ கிளம்பினால்தான் பசங்களை ஸ்கூலில் விட்டுட்டு , ஆபிஸ் போக சரியா இருக்கும் ”

” அப்போ இந்த பிள்ளைங்களையாவது கொஞ்சம் கவனிச்சிருக்கலாமில்லை .நான் சமையலை சீக்கிரம் முடிச்சிருப்பேன்ல ….”

” ஏன் ..நீ என்ன பண்ணிட்டிருந்த …?.”

” ம் ஊஞ்சலாடிட்டிருந்தேன் .கண்ணு என்ன பிடதியிலையா இருக்கு ? ”

” என்னடி திமிரா …? ஒழுங்கா பேசலை …அறைஞ்சு பல்லை பேத்துறுவேன் …”

” ஆமா , நீங்க அறையிறதுக்கு கன்னத்தை காட்டிட்டு நிற்பேன் .இதுக்குத்தான் எங்க அம்மா , அப்பா என்னை பெத்து அருமையா வளர்த்து உங்க்கிட்ட கொடுத்தாங்களோ ..? ”

” அருமையா வளர்த்தாங்களா …!!! நல்லா எருமை மாதிரி வளர்த்து வச்சருக்காங்க .தெரியாம அதை தூக்கி என் தலையில போட்டுக்கிட்டு நான் அவஸ்தைபடுறேன் ”

” என்னய்யா சொன்ன …? என்னை பார்த்து உனக்கு எருமை மாதிரியா தெரியுது ….? ”

தீயில்லாமல் வீடு சொற்களிலேயே பற்றி எரிய தொடங்கியது .

கணவனுக்கும் , குழந்தைகளுக்குமான லன்ஞ் பேக்குகளை  ” தட் ” என பைக்கின் மேல் எறிந்தவள் ” எப்படி செல்லமா வளர்ந்த பொண்ணு நான் .இப்போ எல்லோருமா என்னை சமையல்காரியாக்கிட்டீங்களே …” என்றாள் .

” இவ்வளவு பேசின பிறகு இந்த சாப்பாட்டை மனுசன் தின் பானா ….? அப்படியே திரும்ப கொண்டு வந்து உன் தலையிலேயே கொட்டுறேன் பாரு ….” இருவரின் கடைசி சண்டை வரிகள் தெருவென்பதால் கொஞ்சம் சத்தம் குறைத்து அடக்கமாக சொல்லப்பட்டது .குழந்தைகள் திருதிருவென விழித்தபடி ‘டாடா ‘ சொல்லக் கூட பயந்தபடி சென்றனர் .

அவர்கள் போனதும் ஹால் சோபாவில் அமர்ந்து கொஞ்சநேரம் அழுதபடியிருந்த சியாமளா அப்படியே தூங்கிப் போனாள் .திரும்ப விழித்தபோது மணி பதினொன்றரை ஆகியிருந்த்து .இப்போது மனம் வெகுவாக சமனப்பட்டிருக்க , குப்பையாய் கிடந்த வீட்டை பார்த்தவள் அவசரமாக எழுந்து ஒதுக்க ஆரம்பித்தாள் .அடுப்பை துடைத்து , பாத்திரம் கழுவி நிமிர்ந்த போது வயிறு பசித்தது .காலையிலும் சாப்பிடவில்லையே …

மணியை பார்த்தபோது பன்னிரெண்டு காட்டியது .சாப்பிடாமல் கொண்டு வந்து தலையில் தட்டுவேனென்றானே ….வகையாய் , வக்கணையாய் பொங்கி போட்டால் சொல்ல மாட்டான் …? சாப்பிடாமல் திரும்ப கொண்டு வரட்டும் …அந்த ஆளுக்கு இருக்கு …

அவன் சாப்பிட்டால் என்ன சாப்பிடாவிட்டால் என்ன …? நான் சாப்பிடபோகிறேன் .தட்டை எடுத்து கூட்டு , பொரியலை வைத்துக்கொண்டு ரைஸ் குக்கரை திறந்தாள் சாதம் போட்டுக்கொள்ள …

இரண்டாவது கரண்டி சாதத்தை வைக்கும் போது சாதத்துடன் சேர்ந்து எதுவோ வித்தியாசமாக தட்டில் வந்து விழ….என்னவென கிளறி பார்த்தவள் …அலறினாள் .

ப்ரௌன் உடலில் ..கறுப்பு புள்ளிகளுடன் சாதத்தோடு …சாதமாக வெந்து குலைந்திருந்த்து ஒரு பல்லி .

ஐய்யய்யோ …இது எப்படி …? மூடி சமைத்த ரைஸ் குக்கருக்குள் இது எப்படி வந்திருக்க முடியும் …?பல்லி விசமாயிற்றே …இப்போது இந்த சாதம் முழுவதும் விசமாகிவிட்டதே …இதை சாப்பிட்டிருந்தால் …

கடவுளே ..குழந்தைகளுக்கும் …அவருக்கும் இதைத்தானே கொடுத்துவிட்டேன் .வேகமாக குழந்தைகளின் பள்ளி பிரின்ஸிபால் போன் நம்பரை தன் போனில் அழுத்தினாள் .

” எங்கள் ஸ்கூல் கரஸ்பான்டட் வீட்டில் ஒரு துக்க நிகழ்ச்சி .அதனால் இன்று பள்ளி விடுமுறை .குழந்தைகள் ஸ்கூல் பஸ்ஸில் வீட்டிற்குத்தான் வந்து கொண்டு வந்திருக்கின்றன .இன்னும் சாப்பிடவில்லை .நீங்கள் வீட்டில் பார்த்துக்கொள்ளுங்கள் ” நிம்மதி மூச்சுடன் மாறி , மாறி தேங்ஸ் சொல்லி போனை வைத்தவள் வரதனுக்கு போன் போட்டாள் .

” ஏங்க மதியம் சாப்பாடு ….? ” இன்னமும் அவனுக்கு ஆபிஸ் லன்ஞ் டயம் ஆகவில்லை என்ற சமாதான மனதுடன் கேட்டாள் .

” ஒரு பருக்கை கூட மிச்சம் வைக்காமல் புல்லா சாப்பிட்டேன்மா .என்னவோ இன்று சாப்பாடு ரொம்ப டேஸ்ட்டாக இருந்த்து .வயிறு முட்ட முட்ட சாப்பிட்டதினால் , இப்போது ஒரு மாதிரி மயக்கம் வருவது போல் கூட இருக்கிறது …..” வரதன் பேசிக்கொண்டு போக , போனை கீழே போட்டுவிட்டு மயங்கி சரிய தொடங்கினாள் சியாமளா .

MUTHULAKSHMI RAGHAVAN

”  ஷியாம் ..! ஏய் ..!  “
மறுமுனையில்  பதிலே இல்லாததில்  சப்தம் போட்டான்  வரதன் ..
”  என்ன மிஸ்டர்  வரதன்  , போனில்  யார்கிட்டப்  பேசிக்கிட்டு  இருக்கீங்க  ..? ”  எதிரில்  அமர்ந்திருந்த  ஜி .எம் . கேட்டார் ..
” நத்திங்  சார் ..”  செல் போனை  அணைத்தான்  வரதன் ..
” ஷியாம்ன்னு  சொல்றாரே ..அவரோட பிரண்டா  இருக்கும் ..”  என்றார்  கோவாவிலிருந்து  வந்திருந்த  டேவிட் …
ஜி.எம்மிற்கு  தெரியும் ..ஷியாம் என்பது  சியாமளா  என்பதின் பெயர் சுருக்கம்  என்பது ..முக்கியமான  ஒப்பந்தத்திற்காக  பிசினெஸ்  லஞ்சிற்கு  five star ஹோட்டலுக்கு  வந்திருக்கும் போது  அவருடைய பி .ஏ  மனைவியுடன்  கொஞ்சிக் கொண்டிருந்ததை  அவர் விரும்பவில்லை ..இறுகிய அவரின் முகம் சொல்லிய செய்தியில்  வரதன்  அவசரமாக செல் போனின்  ஸ்விட்ச்சை  அணைத்து விட்டான் ..
அங்கே  வரதனின்  வீட்டில் சியாமளா    மயங்கிச் சரிந்திருக்க  பள்ளியிலிருந்து  வந்த குழந்தைகள்  காலிங் பெல்லை  அடித்து ஓய்ந்து  அழுக ஆரம்பித்து விட்டார்கள் ..
” என்னம்மா ..?  “
பக்கத்து வீட்டு  பிரகதி  கேட்டாள் ..குழந்தைகள்  சொல்லிய விவரத்தில் அவள் ஜன்னலைத்  திறந்து எட்டிப் பார்த்து விட்டு அலறினாள் ..
” உங்க அம்மாவுக்கு  என்னமோ ஆகியிருக்கு .உங்க அப்பாவுக்கு  போனை  போடுங்க …”
குழந்தைகளிடம் ஏது செல் போன் ..? பிரகவியே நம்பரைக் கேட்டுப் போன் போட்டால் சுவிட்ச் ஆப்  என்று  குரல்  கேட்டது
அக்கம்  பக்கத்தில் கூடி விட்டார்கள் ..வேறு வழியின்றி  கதவை உடைத்து விடலாம் என்று அவர்கள் முடிவு  செய்த போது   பைக்  சத்தம் கேட்டது ..
” அப்பா ..”
அழுதபடி  கட்டிக் கொண்ட குழந்தைகளைப்  பார்த்த வரதன் திகைத்தான்
” என்ன ஆச்சு ..? “
‘  ஊம் …உன் குழந்தைகள்  அழுகிறாங்க ..’ என்று சொல்லத் தோன்றியது பிரகதிக்கு
வீட்டு வாசலில் கூட்டம் ..!     இப்படியா  ஒரு மனிதன்  பதறிப் போகாமல் திருதிருத்தபடி  கேள்வி கேட்பான் ..?
” உள்ளே  உங்க வொய்ப்  மயக்கம் போட்டிருக்காங்க சார் ..”  ஜன்னல் வழி சுட்டிக் காட்டினாள் ..
பதறிப் போய் எட்டிப் பார்த்தான்  வரதன் ..அவன் பதற்றத்தில்  யான் பதறிய பதட்டம் பெறுக  இந்த வரதனும் என்று திருப்தியடைந்தாள்  பிரகவி ..
பின்னே ..? அவளா சியாமளாவுக்கு  தாலி கட்டியிருக்கிறாள் ..? வரதன்தானே  தாலி கட்டியிருக்கிறான் ..?
” ஷியாம் ..ஷியாம் ..”  வரதன் கத்தினான்
” ஏன்  சார் ..மயக்கம் போட்டிருக்கிறவங்க  எப்படி சார்  எழுந்து வந்து கதவை  திறப்பாங்க ..?” கடுப்புடன் கேட்டாள்  பிரகதி ..
” மயக்கம்ன்னு  நிச்சயமா  எப்படிம்மா சொல்ல முடியும் ..? வேற ஏதாவது  ஆகியிருந்தா ..? ” எதிர் வீட்டு ஏகாம்பரம்  அவர் மனதின் அபிலாசையை தெரிவிக்க
”  யோவ் ..” என்று கொலைவேறியாகி  போனான் வரதன் ..
குப்பை கொட்டும் விசயத்தில் ஏகாம்பரத்தின்  மனைவியுடன்  சியாமளா  சண்டை  போட்டாள்  என்பதற்காக  ஒரு மனிதன் இந்த அளவுக்கு  கடுப்பைக் காட்டுவாரா ..?
” கதவை  உடைக்கிறதைத் தவிர வேற வழியில்லை ..”  தேக்கு மரக்கதவை  துவேசத்துடன்  பார்த்தபடி திருவாய்  மலர்ந்தார் பக்கத்து வீட்டுக்காரர் ..
ஒனிடா டி .வி  மட்டும்  சொந்தக் காரர்களின்  பெருமை ..பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு  விரோதியில்லை ..தேக்கு மரக் கதவு கூட அப்படித்தான் ..
” என்கிட்டே  இன்னொரு சாவியிருக்கு ..”
வரதன் சாவியை காட்டியதில் பக்கத்து வீட்டுக் காரரின்  ஆசையில் மண் விழுந்தது ..
வரதன் கதவை திறக்க தெருவே வீட்டுக்குள் புகுந்தது ..தரையில் கிடந்த  மனைவியை  அள்ளி  மடியில்  போட்டுக் கொண்ட  வரதன்  அவள் கன்னத்தைத்  தட்டி
” சியாமளா  ..என்னைப்  பாருடி ..” என்று புலம்பினான் ..
‘ம்ஹூம் ..ஒருநாள் ஒருபொழுதாவது  என் புருசன்  இப்படி பாசம் காட்டியிருப்பாரா ..’ பிரகதி பொருமினாள்
சுமதி கொண்டு வந்து தந்த தண்ணீரை  வாங்கி மனைவியின்  முகத்தில்  அடித்தான்  வரதன் ..கண்விழித்த  சியாமளா  முகத்தின் அருகே குனிந்திருந்த  வரதனின்  முகத்தைக்  கண்டதும்
” என்னங்க ..வந்துட்டீங்களா ..உங்களுக்கு  ஒண்ணுமே ஆகலையில்ல  ..” என்றபடி  கணவனைக்  கட்டிக் கொண்டாள்
இப்போது  ஒருநாள் ஒருபொழுதாவது  என்று தன்  மனைவியை நினைத்து  மனதுக்குள் புழுங்குவது  ஏகாம்பரத்தின்  முறையானது ..
பிரகதிக்கு  அந்த  அன்யோன்யத்தைக்  கண் கொண்டு பார்க்க முடியவில்லை ..அதை உடைக்கா விட்டால் அவள் எப்படி பிரகதியாவாள் ..?
” எல்லாம் சரி சார் ..உங்க வொயப்  மயக்கம் போட்டிருக்காங்கன்னு  உங்களுக்கு போன் பண்ண டிரை  பண்ணினா  போன்  சுவிட்ச் ஆப் ன்னு வந்ததே ..நீங்க வரப்போய்  நிலைமை  சரியாச்சு ..இல்லைன்னா  அக்கம் பக்கத்தில இருக்கவங்களால  என்ன செய்ய முடியும் ..?” என்று வத்திக் குச்சியைக்  கொளுத்திப் போட்டாள் …
ஏதோ அவளால் ஆனது  அது மட்டும்தான் ..
அதற்கு வரதன் சொன்ன பதிலில்  சியாமளா மகிழ்ந்து போய் விட்டதைத்தான் பிரகதியால் தாங்க முடியவில்லை ..
”  இல்லைங்க ..பிசினெஸ் லஞ்ச்சில்  இருந்தேன் ..அதான் போனை சுவிட்ச் ஆப் பண்ணிட்டேன் ..”
” நிஜமாவா ..?”
வரதனின்  தோளைத் தழுவினாள் சியாமளா ..
‘ இவளை விட்டுட்டு ஸ்டார்  ஹோட்டலில் மொக்கிட்டு வந்திருக்கான் ..இவ என்னடான்னா  கட்டிப் பிடிச்சு  சந்தோசம்  கொண்டாடராளே ‘ பிரகதி  எரிச்சலுடன்  கிளம்பி விட்டாள்  ..அதற்கு மேலும் அங்கே நின்று  அந்த கணவன் மனைவியின் அன்யோன்யத்தில்  அவளால் வயிறெரிய  முடியவில்லை ..மற்றவர்களும்  அகன்று விட  கணவனையும் குழந்தைகளையும்  அருகே இழுத்து  கட்டித் தழுவி கண்ணீர் உகுத்தாள்  சியாமளா ..
” என்னடி ..?”
” நான் கொடுத்து விட்ட லஞ்ச்சை சாப்பிட்டுட்டேன்னு  சொன்னீங்களே ..”
” சாரிடி ஷியாம் ..போகிற வழியில எதிரே வந்த  சைக்கிள் மேலே மோதிட்டேன் ..லஞ்ச் கொட்டிப் போச்சு ..சொன்னா நீ கொவிச்சுக்குவேன்னுதான்  பொய்  சொல்லிட்டேன் ..”
குற்ற உணர்வுடன் வரதன் சொல்ல ” கடவுளே ..! என்னைக் காப்பாற்றின சாமி ..!” என்று கை குவித்தாள்  சியாமளா ..புரியாமல் பார்த்த வரதனிடம் அவள் விவரம் சொல்ல பதறிப் போன வரதன் குழந்தைகளின்  டிபன் பாக்சுகளை   குப்பையில் வீசினான் ..சோர்ந்திருந்தவளிடம்
” சாப்பிட்டியாடி ..” என்று கேட்டவன்
” உன் முகத்தைப்  பார்த்தாலே தெரியுதே ..காலையில இருந்து கொலை பட்டினியா  இருந்திருக்க ..”  என்றபடி பையில் இருந்த உணவு பொட்டலங்களை பிரித்து  பரத்தினான் ..
” என்னங்க இது ..?”
” ஸ்டார் ஹோட்டலில லஞ்ச் சாப்பிட்டேனா ..மனசு கேட்கலை ..உனக்கும் பிள்ளைகளுக்கும்  தலப்பாக்கட்டு  பிரியாணி வாங்க்கிட்டு வந்தேன் ..”
அவன் ஊட்ட  நெகிழ்ச்சியுடன்  சாப்ப்பிட்டவளுக்கு  இதுவல்லவோ வாழ்க்கை என்று தோன்றியது ..
மறுநாள் காலையின் களேபரத்தில் அவளுக்கு வரதனின் மீது கோபம் வரவேயில்லை ..
வாழ்க்கை கசப்பு நிறைந்தது  என்று யார் சொன்னது ..?
                                           PADMA GIRAHADURAI

” ஏன்டா ஏதோ புது ப்ராஜெக்ட் கிடைத்ததினால் , இன்று எல்லோருக்கும் ஸ்டார் ஹோட்டலில் லன்ஞ்சுன்னு நம்ம பாஸ் சொன்னாரே ,அதுக்கு கிளம்பிட்டு இருக்கோம் . நீ ஏன்டா உன் ஒய்ப்கிட்ட பொய் சொல்ற ” கூட வேலை பார்க்கும் சந்துரு கேட்டான் .

” இல்லடா காலையில் ஒய்ப்போட சின்ன சண்டை .உன் லன்ஞ்சை சாப்பிடாமல் கொண்டு வந்திடுவேன்னு அவகிட்ட கோபத்தில் சொல்லிட்டு வந்துட்டேன் .சொன்ன மாதிரியே சாப்பிட முடியாமலேயே ஆயிடுச்சு .இதை போனில் அவளிடம் சொல்ல முடியுமா …? நான் ஈவினிங் வீட்டிற்கு போய் அவளை சமாதானம் செய்து கொள்கிறேன் ” என்றான் வரதன் .

அனைவரும் லன்ஞ்சுக்கு கிளம்ப , வரதனின் போன் ஒலித்தது . சியாமளாவின் அம்மா சுந்தரியின் நம்பர் அதில் .

இவுங்க ஏன் இப்போ போன் போடுறாங்க …? நான் கொஞ்சம் நிம்மதியா இருந்தா இந்த குடும்பத்துக்கே பிடிக்காதே …மூக்கில வேர்த்திடும் …பக்கத்து தெருவிலயே இருந்துட்டு நினைச்சா மகளை பார்க்க வருவாங்க .ஒரு வேளை இப்போ வந்தவங்ககிட்ட , காலையில நடந்த சண்டையை என் பொண்டாட்டி போட்டு கொடுத்திட்டாளோ …? அதுக்கு பஞ்சாயத்து பண்ண கூப்பிடுறாங்களோ …? எப்போ பார்த்தாலும் புருசன் , பொண்டாட்டி பிரைவஸில தலையிடுறதே வேலை .. .இருக்கட்டும் இந்த தடவை நல்லா வாங்கு வாங்குன்னு வாங்கிடுறேன் .

இப்படி எண்ணமோட… வீராவேசத்துடன் போனை ஆன் செய்தவன் , சட்டென குரலை பவ்யமாக மாற்றி ” அத்தை ….” என்றான் குழைவாக .

” மாப்பிள்ளை சியாமளா மயங்கி விழுந்துட்டா .நம்ம தெரு ஆஸ்பிடலில் சேர்த்திருக்கேன் .சீக்கிரம் வாங்க ” சுந்தரி பதட்டமாக கூறினாள் .

அனைவருமாக ஒன்றாக சேர்ந்து சென்று கொண்டிருந்த வேனிலிருந்து ,விளைவுகளை பற்றி கவலைப்படாமல் குதிக்க தயாரானான் வரதன் .” யோவ் வேனை நிறுத்துக்கய்யா .என் பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்லை ” கத்தினான் .அனைவரும் சமாதானப்படுத்தி அவனை அவனது தெரு முனையில இறக்கி விட்டு விட்டு சென்றனர் .

அவனை பார்த்ததுமே ” ஒண்ணும் பயமில்லை மாப்பிள்ளை .சாதாரண மயக்கம்தான் .ட்ரிப்ஸ் ஏத்திட்டிருக்காங்க .உள்ளே போய் பாருங்க .புரோட்டாவை பிய்த்து குழந்தைகளுக்கு ஊட்டியபடி சொன்னாள் சுந்தரி .

” நீங்க என்னடா அதுக்குள்ளே வந்துட்டீங்க ..? ” குழந்தைகளிடம் கேட்டான் .

” ஸ்கூல் லீவ் விட்டாங்க டாடி .வீட்டுக்கு வந்தால் அம்மா கதவை திறக்கவே இல்லை .பிறகு பக்கத்து வீட்டுக்கு போய் பாட்டிக்கு போன் போட்டோம் ” சால்னா வாயுடன் சொன்னாள் சுமதி .

ம்க்கும் பாரேன் இதுகளை …அம்மா கதவை திறக்கலைன்னா …அப்பாவுக்கு கூப்பிடனும்னு தோணுதா …? உடனே பாட்டிக்கு போன் ….உள்ளுக்குள் பொருமியபடி ” என்ன அத்தை இந்நேரம் புரோட்டா …? ” என்றான் .

” இதோ எதிர் கடையில் சூடாக போட்டுட்டிருந்தாங்க .பிள்ளைங்க ஆசையாக கேட்டது .அதுதான் வாங்கி ஊட்டிக் கொண்டிருக்கிறேன் .நீங்க உள்ளே போய் சியாமியை பாருங்க ”

வரதனை பார்த்தவுடன் ” என்னங்க …” என அழ ஆரம்பித்தாள் சியாமளா .

“உங்களுக்கு ஒண்ணுமில்லையே …நீங்க நல்லாதானே இருக்கீங்க …? ” பரிதவிப்புடன் அவனை தடவிப்பார்த்தாள் .

” ஏய் ..எனக்கென்னடி நான் நல்லாதான் இருக்கேன் .”

” மதியம் லன்ஞ் ….நீங்க …? ”

” அது …ஆபிஸ்ல இருந்து ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனாங்களா ..அதுதான் ..உன் சாப்பாடை சாப்பிட முடியலை …” அடி எதுவும் விழுந்து விடுமோ ..? என பயந்தபடி தடவிய கன்னத்தில் அழுத்தமாக , ஈரமாக கிடைத்தது முத்தமொன்று .

” புள்ளைங்க சாப்பிட்டாங்களா …? ”

” உன் லன்ஞ்சை தூக்கி ஓரமாக வைத்துவிட்டு புரோட்டாவை ஒரு கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ….”

இப்போது மேலும் , மேலும் முத்தங்கள் முகம் முழுவதும் நிறைந்தன .அடடா …இன்னைக்கு காலைல நரி முகத்தில் முழித்தேனா …? இப்படி இனிப்பாக கிடைக்கிறதே …சந்தோசத்துடன் மனைவியை அணைத்தபடி …” என்னடி ஆச்சு …? ” என்றான் ்

” நான் பாவி …கொஞ்சமும் கவனமில்லாமல் இப்படி புள்ளைங்களுக்கும் , உங்களுக்கும் வினையை தேடி இழுத்து வைக்க பார்த்தேனே . சாதத்தில் பல்லி விழுந்திடுச்சுங்க .தெரியாமல் அதை உங்களுக்கு வச்சு கொடுத்திட்டேன் .” தலையில் அடித்துக் கொண்டாள் .

அவள் கைகளை பிடித்து தடுத்தபடி ” நீ எதுவும் சாப்பிட்டு விடவில்லையே ” பதட்டமாக கேட்டான் .

” நான்தான் முழுதாக முன்னால் இருக்கேனே ..பிறகெப்படி …” பேசியவளின் பின்தலையில் அடி விழுந்த்து .

” அடிப்பாவி இதுதான் நீ குடும்பம் நடத்தும் லட்சணமா …? ” நின்றவள் சுந்தரி .

” இல்லம்மா …கவனக்குறைவா ….”

” இதிலென்ன கவனக்குறைவு ….” மீண்டும் கொட்ட உயர்ந்த அவளின் கைகளை தடுத்து ” விடுங்கத்தை அவளே இல்லாத கஷ்டமெல்லாம் பட்டு தெளிஞ்சு உட்கார்ந்திருக்கா …நீங்க வேற ” என்றான் வரதன் .

” அட ஆமாம் ..நீ பேசாமல் நம்ம வீட்டிற்கு வந்து இரண்டு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு வாம்மா .”

வரதனுக்கு திக்கென்றது .இன்னைக்கு் இவா கொஞ்சம் குழைஞ்சி வந்திருக்கா …இப்போ போய் இந்த மாமியார் வீட்டுக்கு கூப்பிடுறாங்களே …

அம்மாவின் அருகே நின்ற தனது இரு குழந்தைகளையும் வாரி அணைத்த சியாமளா ” நீ வீட்டுக்கு போம்மா .நான் அடுத்த வாரம் வர்றேன் ” கணவனை காதலாய் பார்த்தபடி கூறினாள் .

” சரி எதற்கும் நான் ஒருநாள் இருந்துவிட்டு போகிறேன் …” சுந்தரி நகர்ந்தாள் .

மறுநாள் காலை …

” உங்களுக்கு இன்னொரு தோசை முட்டை தோசையா ஊத்தட்டுமா …? ” வரதனிடம் கொஞ்சு குரலில் கேட்டாள் சியாமளா .

அந்தக் குரலில் விழுந்த வரதன் ” ஓ…ஊற்றேன் ….” தலையை வேகமாக ஆட்டினான் .

தட்டில் வைத்த முட்டை தோசையை பிய்த்தவன் ” ஏய் என்னடி இது உள்ளே வேகாமல் முட்டை அப்படியே இருக்குது ..? இதை சாப்பிட்டால் என் வயிறு என்ன ஆகிறது …? ” கத்தினான் .

” ஏன் கத்துறீங்க ..? எல்லாம் வெந்துதான் இருக்கு .கொட்டிக்கோங்க …”

” சை மனுசன் தின்பானாடி உன் சமையலை …நீயே தின்னு ..” தட்டை தள்ளிவிட்டு எழுந்து லன்ஞ் எடுத்துக் கொள்ளாமலேயே ஆபிஸிற்கு கிளம்பி போனான் .

” இந்த மனுசன் பண்ணுற அலப்பறைக்கு ஒரு நாள் இல்லை …ஒரு நாள் நானே இந்தாளுக்கு சாப்பாட்டில் விசம் வைக்க போறேன் பாரு …” சுந்தரியிடம் கத்தினாள் சியாமளா .

அவள் அட கொடுமையே..! என தலையில் கை வைத்துக் கொண்டாள் .

 

Leave a comment

2 COMMENTS

  1. Cha nalla chance a miss pannitane mam…. pongal ku oorukku poiten mam… siru kadhai romba nalla irundhuchu Rendu per Climax yallame super mam..

LEAVE A REPLY