மரகத கம்பளமாய் மின்னியது அந்த பூமி .வாய்க்கால் நீரை நன்றாக வெட்டி பயிர்களுக்கு வாகாக திருப்பி விட்ட வேல்முருகன் ,நிமிர்ந்து பயிர்களை பார்த்து தன் உழைப்பில் பெருமிதம் கொண்டான் .

இந்த தடவை நல்ல விளைச்சல்தான் .பணத்தை ஒரு அள்ளு அள்ளிடலாம் .மீசையை முறுக்கிக் கொண்டான் .வெயில் மெல்ல உறைக்க ஆரம்பித்திருந்த்து .வாய்க்கால் நீரிலேயே தன் கால் சேற்றினை கழுவிக் கொண்டவன் ,எல்லா இடங்களிலும் நீர் பூமி குளிர பாய்ந்திருக்கிறதா என பார்வையிட்டான் .

நீருறிஞ்சிய நெற்செடிகள் உண்ட  போதையில் தடுமாறி தலை சாய்ந்து கிடப்பதாக அவனுக்கு தோன்றியது .

” மனுசன்தான் தண்ணியடிச்சுட்டு போதையா கிடக்கான். உங்களுக்கென்ன இந்த பச்சை தண்ணியே போதையா போச்சா …?இப்படி கிறங்கி கிடக்குறீக …? ” செல்லமாக தன் தாவரங்களை வருடினான் .உண்டு முடித்து பெருத்த ஏப்பம் விடும் குழந்தையை தாய் ஆதரவாய் தடவுவது போலிருந்த்து அது .

தன் செல்வங்களை தாங்கிய புவியம்மா குளிர்ந்து விட்டது உறுதிபட்டதும் , மோட்டாரை அணைத்து  தண்ணீரை நிறுத்தினான் .காலை சாப்பாட்டிற்காக வீட்டிற்கு கிளம்பினான் .தனது டி.வி.எஸ் பிப்டியின் மீது மாட்டி வைத்திருந்த சட்டையை எடுத்து அணிந்தான் .அதிலிருந்த போனில் பதிவகியிருந்த அழைப்பு மகன் குணமாறன் அழைத்திருந்த்தை கூறியது .

இவ்வளவு  காலையிலா …?என்னவாக இருக்கும் …?யோசனையுடன் பட்டன்களை அமுக்கினான் .மூன்றாவது ரிங்கில் எடுத்த குணமாறனின் அப்பா என்ற அழைப்பே அவனது தேவையை சொல்லியது .பணம் …..

” அப்பா …எனக்கு ஐயாயிரம் பணம் வேணும் .என்னவோ ஸ்பெசல் ஸ்பீசாம் …இரண்டு நாளில் கட்டனுமாம் ….” நிறைய தயக்கம் அவன் குரலில் .

இரண்டு நல்ல கட்டணும்னு இப்போ சொல்றியே .ஏன் உனக்கு முதல்லேயே தெரியாதா ? கடைசிநேரத்தில் சொன்னா நான் என்ன பண்ண …?இப்படி வேகமாக கத்த வார்த்தைகள் வாயை தாண்டி வந்து விட்டன.கஷ்டப்பட்டு அவற்றை விழுங்கிக் கொண்டான் .

குணமாறனுக்கு தெரியாமலிருந்திருக்காது .தெரிந்திருக்கும் .அப்பாவிடம் எப்படி சொல்வதென தெரியாது தவித்துக் கொண்டிருந்திருப்பான் .இப்போது வேற வழியில்லாமல் சொல்லியிருப்பான் .

திரும்பியவன் கண்களில் விளைந்திருந்த மண்மாதா பட்டு தெம்பினை ஊட்டினாள் .

” சரிப்பா அப்பா எப்படியாவது ஏற்பாடு பண்ணுகிறேன் ” வறண்ட குரலில் கூறிவிட்டு போனை அணைத்தான் .

பச்சை இலையில் வைக்கப்பட்ட வெண்மை இட்லிகளின் தலையில் ஊற்றப்பட்ட மஞ்சள் சாம்பாரின் வண்ணக்கலவை வேல்முருகனை கவரவில்லை .

” என்னங்க என்ன யோசனை …?” சந்திரா தேங்காய் சட்னியை ஊற்றியபடி கேட்டாள் .

” குணா போன் போட்டிருந்தான் …”

” அப்படியா …?எப்போ …?எனக்கு போடலியே …? என்ன சொன்னான் …?” பரபரப்பு அவளிடம் .

பதிலின்றி இட்லிகளை வாயில் அடைத்தான் .

” ஏன் இப்படி வெறும் இட்லியை முழுங்குறீங்க .நல்லா சாம்பார்ல நனைங்க .” என்றபடி இன்னும் சாம்பாரை ஊற்றினாள் .

” வேலண்ணே …” வெளியே குரல் .

” வாடா மணி …உள்ள வா …” இங்கிருந்து கத்தினான் வேல்முருகன் .

” அண்ணே இந்த தடவை கொள்முதல் நூறு கிலோவுக்கு ஆயிரத்திஇருநூறாம் அரசாங்க விலை ” என்றபடி அவனருகே சம்மணமிட்டு அமர்ந்தான் மணி .

” என்னடா இது கொடுமையா இருக்கு …? வருசாவருசமா இதே விலையத்தான் வச்சு தொலையுறாங்க …” மிகுந்த துயரம் வேல்முருகன் குரலில் .

” உரம் விலை ஐநாறிலிருந்து ஆயிரத்து இருநூறுக்கு போயிடுச்சு .ஆனா அரிசி விலை மட்டும் அஞ்சு வருசமா அதே ஆயாரத்தி இருநூறிலேயே இருக்கு .ஆத்தா மகமாயி நீதான் ஆத்தா இவுங்களை கேட்கனும் .ந்தா …மணி உட்காரு இரண்டு இட்லியை பிச்சிப் போட்டுக்கிட்டு போ …” மணிக்கும் பரிமாறியபடி புலம்பினாள் சந்திரா .

அரசாங்கத்தின் இந்த கணக்கை எந்த வகையில் சேர்ப்பதென்றே தெரியவில்லை வேல்முருகனுக்கு .நின்று பிழைப்போமா …?என்றிருந்த்து அவனுக்கு .

” அதப்  பத்தி அரசாங்கம் ஏன் மதினி கவலப்பட போகுது .உங்க கவலை உங்க வீட்டோட  ,என் கவலை என் வீட்டோட…” என்றபடி ஆறாவது இட்லியில் கை வைத்தான் .

” இன்னும் எத்தனை நாளைக்குடா இப்படி நாம இட்லி சாப்பிட முடியும் …? ” வேல்முருகனின் கேள்வியில் மணிக்கு இட்லி தொண்டையில் விக்கியது .

” அண்ணே இத பொறவாட்டி பேசுவோமே ….” என்றான் பரிதாபமாக சாம்பார் சட்டியை பார்த்தபடி .

பெருமூச்சுடன் கை கழுவ எழுந்தான் வேல்முருகன் .

” அண்ணே காளிமுத்து பெரியப்பா இது விசயமா உங்க்கிட்ட பேச வீட்டுக்கு வர சொன்னாரு ….” விரல்களை வாய்க்குள் விட்டு எடுத்தபடி சொன்னான் மணி .

” ஏன் மதினி உங்க வீட்டு இட்டிலி மட்டும் எப்படி பஞ்சு பஞ்சா இருக்கு ..? என்ன உளுந்து போடுவீக …? என் வீட்டுக்காரில்லாம் கார் டயரைத்தான் கொஞ்சம் கொஞ்சமா வெட்டி போட்டு இட்லின்னு பேர் வச்சிக்கிறா …”

” என்ன உளுந்தா இருந்தாலும் அத விளைவிக்க நிலம் வேணும் .உழுக விவசாயி வேணும்ல .இதெல்லாம் இனி நடக்குமா தம்பி …” என சந்திரா கவலையில் விழ அவள் தனது கேள்விக்கு பதில் சொல்லும் நிலையிலில்லை என புரிந்து கொண்ட மணி எழுந்து கை கழுவினான் .

வெளியேறுகையில் கைகளை பின்னே மறைத்தபடி வந்த சந்திரா தயக்கமாக நின்றாள் .

” என்ன சந்திரா ?”

” இத வச்சுக்கோங்க ” வேல்முருகனின் கைகளில் சந்திராவின் கடைசி நகையான ஜோடி வளையல்கள் .அவள் பாட்டி தந்த்தென இவ்வளவு நாட்களாக பொத்தி  ாதுகாத்து வந்திருந்தாள் .

” இப்போ எதுக்கு …?”

” காலைல. நம்ம தம்பி பணம் கேட்டுத்தானே போன் போட்டுச்சி .இதை வச்சி ஏற்பாடு பண்ணுங்க ” என்றாள் .

” ஏன்டி ஏற்கெனவே எல்லாத்தையும் கழட்டி கொடுத்துட்டு தொடச்சிவிட்ட மாதிரி நிற்கிற. அடுத்த தடவ உன் பையன் கேட்கிறப்ப எதை கழட்டி தருவ …”

” அதை அப்ப பாக்கலாம் .இப்ப இதை புடிங்க …”

” பொம்பளை புள்ள ஒண்ணு இருக்குங்கறதை மறந்துட்டு இப்படி கழட்டி கழட்டி நீட்டாதடி ”

” ஆமா..பத்தாப்பு படிக்கிற புள்ளையை பத்தி இப்ப எதுக்கு கவலை ..? அவளுக்கு நகை செஞ்சு போட என் மகன் படிச்சு முடிச்சு வந்திடுவன் ” பெருமிதம் அவள் குரலில் .

” சரி ..சரி …உள்ள வை .நானே தேவைப்பட்டா வாங்கிக்கிறேன் .” பந்தாவாக பதில் சொன்னாலும் அந்த வளையிலை தவிர தனக்கு வேறு வழியில்லை என்பது வேல்முருகனுக்கு தெரியும் .

காளிமுத்து பெரியப்பா வீட்டில் வேல்முருகனோடு சேர்த்து இன்னும் சில விவசாயிகள் இருந்தனர் .அனைவரும் அங்கே சொல்லும்படி விவசாயம் பார்த்து வருபவர்கள் .காளிமுத்து அவர்களுக்கு தலைமை போல .வயமில் மூத்தவர் என்பதால் இந்த பதவி அவருக்கு .

” அண்ணே வருசா வருசம் இப்படி ஒரே விலை போடுதே அரசாங்கம் .இதை என்னண்ணே பண்ண …? ” முதல் ஆதங்கம் சண்முகம் குரலில் .

” நாம வருசா வருசம் பேசாம இருந்தா அரசாங்கம் இப்படித்தான் பண்ணும் .எதுத்து குரல் கொடுக்கனும் .” இன்னொருவர் .

” இரண்டாயிரம்னு அடிச்சு பேசுவோம்னே.என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம் … ”

” ஆமாம் இவரு இரண்டாயிரங்கவும் அவுங்க குனிஞ்சிக்கிட்டே வந்து வாங்கிட்டு போவாங்க பாரு ”

” வாங்கலைன்னா நாமளே வச்சு விப்போம் …”

” யாருக்கு ….?”

” அதான் அந்த அரிசி ஆலை முதலாளிங்க வருவாங்களே .அவுங்க்கிட்டதான் .இரண்டாயிரம் கொடுத்தாத்தான் மூட்டையை வண்டியேத்துவோம்னு சொல்லிடுவோம் ”

” அவன் உன்னைவிட்டுட்டு உன் பங்காளிகிட்ட போயிடுவான.அவன் ஆயிரம் ருபாய்க்கு விப்பான் .நீ விரலை சப்பிக்கிட்டு பார்த்துக்கிட்டு இருப்ப ”

” ஓ…ஆயிரம் ருபாய்க்கு வித்திடுவானா அவன் ..? அவன் தலையை வெட்டிடுவேன் …”

” ஆமா ..நீ …கிழிச்ச….”

பேச்சு எங்கெங்கோ திசை மாறி எப்படியோ போய் ஒருவரையொருவர் அடிக்கும் அபாய நிலைக்கு வந்த்து . ” டேய் இப்போ நிறுத்த போறீங்களா இல்லையாடா …? ” ஓங்கி கத்தினார் காளிமுத்து பெரியப்பா .

” எந்த அரிசி ஆலைக்காரன்டா உங்க்கிட்ட நெல்லுக்கு வந்து நிற்க போறான் …? என்னைக்கு அரசாங்கம் இலவச அரிசி அறிவிப்பு கொடுத்ததோ .அன்னையோட ஆலைக்காரனெல்லாம் நம்ம பக்கம் திரும்புறதில்லைங்கிறதை மறந்துட்டீங்களா ..? நமக்கு நாமளே  விலை சொல்லி  நாமளே வாங்கிக்கவும் வேண்டியதுதான் …” காளிமுத்து பெரியப்பா விரக்தி பொங்க கத்த அந்த இடமே அமைதியானது .

தங்களது அநாதரவான நிலை புரிய அனைத்து விவசாயிகளும் கலங்க துவங்கினர் .

” நம்ம வியர்வை எல்லாம் இந்த ஜனங்க சாப்பிடுறாங்களே .நமக்காக ஒரு வார்த்தை பேச ஒரு ஆளாவது இருக்காங்களா …?” சண்முகம்தான் மீண்டும் மௌனத்தை கலைத்தான் .

” டேய் சண்முகம் அப்படி சாப்புடுற ஜனங்களை விடு .அதில் நாலு எளிமைப்பட்டவன் கூட இருப்பான் .அவன் தின்னா தின்னுட்டு போறான் .ஆனால் பட்டமும் , ப்தவியும் வச்சிருக்கிற சில வசதி படைச்ச ஆளுங்க கூட நம்ம கண்ணெதிர்லேயே நம்ம ரத்தத்தை உறியுறாங்களே அட்டைப்பூச்சி மாதிரி .அவுங்களை என்ன செய்ய ? என்றான் வேல்முருகன் .

” என்னடா …? யாரை சொல்ற …? ” கேட்டார் காளிமுத்து பெரியப்பா .

” நம்ம பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் பெரியப்பா .அவுங்களுக்கு கேன்டீனில் சலுகை விலையில் சாப்பாடு தர்றாங்களாம் .அதைப் பத்தி பேசினேன் ”

அதனால் நமக்கு என்ன பிரச்சினை அண்ணே .எப்படியும் அவுங்க நம்ம நாட்டை பார்த்துக்கிட போறாங்க .கொஞ்சம் அவுங்களுந்தான் சாப்பிட்டு போகட்டுமே …” சண்முகம் மீண்டும் விபரமில்லாமல் பேச காளிமுத்து அவனை முறைக்க அவன் வாயை மூடிக் கொண்டான் .

” நீ விவரமா சொல்லுடா வேலு …” என்றார் காளிமுத்து .

” பெரியப்பா …நம்ம பாராளுமன்ற உறுப்பினர்கள் அவைக்கு தேர்ந்தெடுக்க பட்ட அடுத்த நொடியேநம்ம அரசாங்கம் அவுங்களுக்கு  நிறைய சலுகை தர ஆரம்பிக்குது .அவுங்க சம்பளமே மாசம் ஐம்பதாயிரம் .வீடு , கார் , வேலையாள் , வீட்டு சாமான் , என பல வசதிகள் பணமாகவே தரப்பட்டு விடுது .அதோடு பாராளுமன்ற அவையில் பங்கேற்க கையெழுத்து போட்டால் இரண்டாயிரம் ருபாய் அவுங்களுக்கு உண்டு .”

அனைவரும் வாய் பிளந்தபடி கேட்டுக் கொண்டிருந்தனர் .

” அதாவது சலுகையே தேவைப்படாத இவர்களுக்கு சலுகை விலை உணவு எதற்கு ..?? அரிசிக்கு , இறைச்சிக்கு , பாலுக்கு என்று தனித்தனியாக இவர்களுக்க பணம் வழங்கப்பட்டு விடுகிறது .பிறகும் கேன்ட்டீனில் சலுகை விலையில் உணவு கொடுத்தால் அது எந்த வகை நியாயம் …? ”

” அட ஆமாண்ணே ்..இதை நாங்க யோசி க்கலையே ” அனைவருமே ஒரு மனமாக பேசினர் .

” அரசாங்கம் சந்திக்கும் இந்த நஷ்டமெல்லாம் யார் தலையில் விழுதுன்னு நினைக்கிறீங்க ….? நம்மளை மாதிரி பரிதாப்பட்ட விவசாயிங்க தலையிலதான் .அதனாலதான் வருச வருசமா நமக்கு கொள்முதல் விலை  ஆயிரத்தி இருநூறை தாண்டுறதில்லை .” வெகு நாட்களாக தன் மனதினை உறுத்திக் கொண்டிருந்த விசயத்தை கொட்டினான் வேல்முருகன் .

விடை தெரியாத இந்த புதிரான நிலையால் மௌனமாகினர் அனைவரும் .

தொண்டையை கனைத்தபடி பேச ஆரம்பித்த காளிமுத்து ” நீ பேசுறதெல்லாம் சரிதான்டா .ஆனால் நாம என்ன செய்ய முடியும் இதுக்கு …?” என்றார் .

” நீங்கெல்லாம் என்ன செய்ய போறீங்களோ தெரியாது .நான் என்ன செய்யனுங்கிறதை முடிவு பண்ணிட்டேன் ”

என்ன …என்னவென ஆளாளுக்கு பரபரத்தனர் .

” இந்த வெள்ளாமையோட நெல் விளைச்சலை நிறுத்த போறேன் .”

” என்னடா உளர்ற ..?” அதட்டினார் காளிமுத்து .அதே பிரதிபலிப்பு மற்றவர்களிடமும் .

” ஆமாம் பெரியப்பா .என் பூமியை நான் மாத்த போறேன் .பயப்படாதீங்க .நெல்லுக்கு பதிலா செங்கரை அடுக்க போறதில்லை ்என் தாயை நான் காயவும் போட மாட்டேன் .என் தாயோட வயித்துக்கு நெல்லுக்கு பதிலா , பழமும் , காயும் , கீரையும் தர போறேன் .”

” என்னடா சொல்ற புரியலை …?” காளிமுத்து .

” ஆமாம் பெரியப்பா என் நிலத்தில கொய்யா , மாதுளை பப்பாளின்னு ் பழ மரங்களும் , காய்கறி செடிகளும் , கீரையும் விளைவிக்க போறேன் .வேலியாக மூங்கில் மரங்களை நடப்போறேன் .சொட்டு நீர் பாசனம் ஏற்பாடு பண்ண போறேன் .முடிஞ்சா மல்லிகை பயிரிட போறேன் .இயற்கை உரங்களுக்கு மாற போறேன் .இந்த வகையில் என்னால் ஜெயிக்க முடியும்னு நம்புறேன் .இந்த வகை விவசாயத்திற்கு சம்மதிக்கிறவங்க என் கூட சேர்ந்துக்கலாம் ” கை கூப்பிவிட்டு வெளியேறினான் .

இணக்கமான போக்கு அங்கிருந்த அனைத்து விவசாயிகளின் பார்வையிலும் .

காலம் காலமாய் நெல் விளைந்த பூமி ஒன்று சந்தர்ப்ப சூழ்நிலையால் பழச்சோலையாய் மாறிக் கொண்டிருந்தது .

Leave a comment

LEAVE A REPLY