This summary is Written by Gaanapriya Mohan

 

நவராத்திரியின் அந்திம தினமான இன்று நான் எனது எழுத்தினால் ஆவாஹனம் செய்யவிருக்கும் சரஸ்வதி , என்னை எழுத தூண்டிய ஆண்மகன், முண்டாசு அணிந்து தன எழுத்துக்களால் என்னை கவர்ந்த இலக்கிய போராளி , தனது செந்நீர் விட்டு கவிதைகள் பல வரைந்த காவிய தலைவன் , தமிழ் தாயின் தவ புதல்வன், கண்ணம்மா எனும் அழகோவியத்தின் காதல் நாயகன் , லக்ஷ்மி தேவியின் கடைக்கண் பார்வை கூட படாத ஓர் எளியோன், சரஸ்வதி குடி இருந்தாள் இவனுள் ,  இவனோ காளிமாதாவை யாதுமாக்கினான்! 

இவனால் தமிழ் தாய் புகழ்பெற்றாள் என்பது எனது கூற்று ! இவன் கவிஞன் , பத்திரிகையாளன் , எழுத்தாளன், சமூக சீர் திருத்தவாதி, என பற்பல முகங்கள் கொண்டவன். இவன் எழுத்துகளில் , தேசியம், கண்ணன் – திரௌபதி பக்தி, சமூக சிந்தை, கனல் தெறிக்கும் விடுதலை உணர்வு , பெண்ணியம், அழகான மென்மையான மேன்மையான காதலுணர்வு , தமிழ் மொழி பற்று, தாய்நாட்டு சிந்தை, இப்படி எண்ணிலடங்கா உணர்வுகள் தெறிக்கும், தெவிட்டாது நிரம்பி கிடக்கும். 
“ஆறுவது சினம்” என்ற தமிழ் மூதாட்டிக்கே எதிர் பாட்டு பாடினான் என் முண்டாசு கவிஞன் ” ரௌத்திரம் பழகு” ! போர்த் தொழில் புரியேல்” என்றவளுக்கு “போர்த்தொழில் பழகு”  என்றான் என் தலைவன். தமிழ் மூதட்டியுடன் ஒருங்கிணைந்து எண்ணியவையும் சில உண்டு. “ஈவது விலக்கேல்”, “ஈகைத்திறன்”  என்று இருவரும் ஒத்துப்போன ஒரு கருத்து. 
மானுடம் பாட வந்த இந்த மகானை லக்ஷ்மி தேவி மதிக்கவில்லை. தமிழ் அன்னையோ, வாக் தேவி வழியினில் இவன் வாழ்கையை அலங்கரித்தாள், தன்னையும் அலங்கரித்து கொண்டாள். தமிழ் தாயையும் கண்டித்து என் தலைவன் சில கட்டுரைகள் இயற்றி உள்ளான். ” தமிழில் எழுத்துக் குறை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையையும் “தமிழ்ப்பாஷைக்கு உள்ள குறைகள்” என்ற தலைப்பில் ஓர் உரையாடல் கட்டுரையையும் அவனின் படைப்பே. 
யாமரிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்!
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமருரத் தமிழோசை உலகமெல்லாம்
பரவும் பகை செய்தல் வேண்டும்.
– மகாகவி பாரதி.
முப்பத்தி ஒன்பது என்பது மரணிக்க வேண்டிய வயதல்ல.  என் தலைவன் மத யானையால் அடிக்கப்பட்டு நோய்வாய் பட்டு இறந்தான் என்றெண்ணி மருத்துவம் மருத்துவ சார்ந்த தொழில் கற்றுக்கொண்டு இருக்கும் என்னை – ஏன் என் போல் பலர் இருக்கலாம், நம் அனைவருக்குமான சாசனம், நிஜமாய் நம் தேசம் விடியல் காணும் பொழுது, அந்த சமயத்தில் வாழும் ஓரீரு தமிழன் மனதிலாவது சுப்ரமணிய பாரதி எனும் ஒரு முண்டாசு கவிஞன், மலையளவு சிம்மாசனத்தில் மனதினில் அமர்ந்து ஆட்சி செய்து கொண்டிருப்பான். அதுவரையில் அவனை வணங்குவோம், தமிழ் மறவோம், அவனின் தமிழ் தொண்டையும் மறவோம் ! 
விஜய தசமி தினமான இன்று, சரஸ்வதி ஆவாஹனம் – தேவி பூஜவிதானம் – பாரதமாதாவின் சேவை – இதோ மகா கவி – ஸ்ரீ ஸ்ரீ சுப்ரமணிய பாரதியார் ! ! 

Leave a comment

LEAVE A REPLY