This Ganaga durgai amman  temple is in Chennai west mugaper. The Navarathiri Festival is very famous in this tepmple.

அம்மன் அலங்காரம், வீட்டு அலங்காரம், கொலு அலங்காரம், கூடவே  பெண்கள் தங்களையும் அழகு படுத்திக் கொள்வது என்று நவராத்திரியின் 9 நாட்களும் களைகட்டும். அவரவர் வீட்டுப் பெண்களும் அம்மன் போலவே வீட்டை வளைய வருவார்கள். இங்கு ஒரு வித்தியாசமான நவராத்திரி கொண்டாட்டத்தை பார்க்கலாமே.

சென்னை மேற்கு முகப்பேரில் புகழ் பெற்ற கோயில் கனக துர்கை அம்மன் கோயில் உள்ளது.  இந்த கோயிலில் மிக வித்தியாசமாக நவராத்திரி பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். அது எப்படி எனத் தெரிந்து கொல்வதற்கு முன் இந்த கனக துர்கை அம்மன் கோயிலின் சிறப்பு அம்சங்களைப் பற்றி பார்க்கலாமே!

கோயிலின் கீழ்த்தளத்தில் கனக துர்காம்பிகை நடு நாயகியாக வீற்றிருக்க,  கன்னி மூலையில் வலம்புரி விநாயகர், அடுத்தடுத்து வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணிய சுவாமி, நவக்கிரகம், சத்திய நாராயண மூர்த்தி, பஞ்சமுக ஆஞ்சநேயர், சரபேஸ்வரர், அதர்வண காளி, பிரத்தியங்கரா தேவி, தட்சிணா மூர்த்தி, சப்தகன்னிகள், நாகாத்தம்மன், லட்சுமி குபேரர், ஐயப்பன், பொங்கு சனீஸ்வரர் என்று அத்தனை தெய்வங்களும் உண்டு.சுவாமிகள் குறி சொல்ல குறி பீடமும் உண்டு.


ஈசானி மூலையில் ஜலதுர்க்கா கங்கா  ஜலத்தில் தவம் கொண்டு இருக்கிறாள்  என்றும், வருடத்தில் ஒருமுறை சித்ரா பவுர்ணமி அன்று பக்தர்களுக்கு காட்சி கொடுத்து அருள்பாலிக்கிறாள் என்று கூறுகிறார்கள். இதற்கு ஒரு சிறிய சந்து ஒன்று வைத்து மூடியிருக்கிறார்கள். பக்தர்கள் வேண்டிக் கொண்டு, காணிக்கையை செலுத்தலாம்.


கொஞ்சம் மேல்தளத்துக்கு சென்றால் வைகுண்டம் போலவே பூலோக வைகுண்டத்தை அமைத்து இருக்கிறார்கள். சிலிர்த்துத்தான் போகிறது. இன்னது என்று வர்ணிக்க முடியாதபடியாக காட்சி தருகிறது இந்த வைகுண்டம். இங்கு ரங்கநாதர் மிக நீண்ட வடிவத்தில் பிரமாண்டமாய் கிடந்த கோலத்தில் காட்சி தருகிறார்.


ராசி மண்டபத்தின் கீழ் நின்று நாம் நினத்தைதை வேண்டியபடி, பின்னர் ரங்கநாதனிடம் அருகில் சென்று நமது வேண்டுதலை வைத்தால் வேண்டியது கிடைக்கும் என்பதில் பூரண நம்பிக்கை உண்டு.

இதற்கும் கொஞ்சம் மேல்தளத்தில் சென்று பார்த்தால், கைலாயம் அமைத்து இருக்கிறார்கள். அது மிக பிரமாண்டமாய் காட்சி தருகிறது. பெரியதாக கைலாய லிங்கம், அதன் மேல் சிவன் என்று பார்க்க பரவசமாக உள்ளது.

இப்படி மூன்று லோகங்கள் அமைந்து இருக்கும் இந்த கோயிலில் நவராத்திரியை எப்படி கொண்டாடுகிறார்கள் என்று, நிர்வாகி ஸ்ரீ ஜெயபால் சுவாமிகளிடம் கேட்டபோது,

“நமது கனகதுர்கா கோயிலில் நவராத்திரியை கொலு வைத்து கொண்டாடுவது இல்லை. அதற்கு பதிலாக தினமும் 9 வெவ்வேறு சிறுமிகளை சப்த கன்னிகளாக பாவித்து, அவர்களுக்கு பட்டாடை உடுத்தி, அம்மன் போல அலங்கரித்து, பாத பூஜைகள் செய்து, அவர்களுக்கு மாலை அணிவித்து, தீபாராதனை காண்பித்து, அவர்களுக்கு பிரசாதம் ஊட்டி மகிழ்வித்து, அவர்களை அம்மன்களாக பாவித்து, அவர்களிடம் அனைவரும் ஆசி பெறுவது வழக்கம்.

இப்படி மொத்தம் 81 சிறுமிகளை நவராத்திரியில் நாங்கள் அம்மனாக பாவித்து பாத பூஜை செய்து வழி படுகிறோம். இதை அனைத்து பொது மக்களும்  வரவேற்று, வணங்கி மகிழ்கிறார்கள்.” என்று கூறுகிறார் சுவாமிகள். நிஜம்தான், இந்த 9 சிறுமிகளும் பக்தர்களின் கண்களுக்கு சப்த கன்னிகள் போலத்தான் காட்சி தருகிறார்கள். இது ஒரு வித்தியாசமான நவராத்திரி கொண்டாட்டம்தான்.

Leave a comment

LEAVE A REPLY