This song is shared to us by Sathya GB

 

இன்று வேலை முடிந்து இரவு (இரவா மாலையா?) 7.45 மணிக்கெல்லாம் வீடு வந்து சேர, ஒரு குளியல் போட்டு வெளியே காலாற கொஞ்சம் நடந்து விட்டு வரலாம் என ஒரு ஆசை.

 

8 மணியளவில் மாம்பலம் ஏரிக்கரை சாலையில் நடந்தபடி ‘பப்ளிக் ஹெல்த் சென்டர்’ மருத்துவமனையை கடக்கும் போது நான் பார்த்த காட்சி என்னை நகரவிடாமல் அங்கேயே நிற்க வைத்தது. பதட்டத்துடன் ‘மலங்க மலங்க’ நின்றபடி ஒரு வாலிபன். நிச்சயம் வயது 25க்குள் தான் இருக்கும். அருகே நடுத்தர வயதுடைய மனிதர். இருவரும் டை கட்டி… அவர் தோளில் குறுக்கே மாட்டி இருக்கும் பையும் அந்த வாலிபன் கையில் சுமந்திருக்கும் பையும் அவன் புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் மருந்து விற்பனை பிரதிநிதி (Medical Representative) அவர் ஏரியா சேல்ஸ் மேனேஜர் அல்லது ரீஜனல் மேனேஜர் என ‘உணர்வு’ சொல்லியது. (எப்படித் தெரியுமா? இதெல்லாம் கடந்து வந்தவன் தானே!) தொடர்ந்து அவர்கள் பேச்சை ஒட்டு கேட்ட பின் (எப்போதும் டாக்டர மட்டும் டாக்டர்ன்னு தான் சொல்லணும், ஒரு ரெப் எப்போதும் சார்/மேடம் ஸ்லாங் டாக்டர கூப்பிட பயன் படுத்தக் கூடாது – என்கிட்டயும் சொன்னானுவளே மொமண்ட், ரெகுலர் விசிட் (தொடர் சந்திப்புகள்) போனா கண்டிப்பா பிரிஸ்க்ரைப் செய்வாங்க) சுத்தமாய் அந்த இடத்தை விட்டு நகர மனசில்லை.

 

அந்த மருத்துவமனை அருகேயே ஒரு பாவ் பாஜி /சமோசா /ஜிலேபி என களை கட்டும் கடை. அந்த கடைக்கு சென்று ஒரு பாவ் பாஜி ஆர்டர் செய்து விட்டு அவர்கள் பேச்சை கவனித்தபடி இருந்தேன். ‘அறிவுரை மழை. அதுவும் கன மழை’ முதல் நாள் இரவு நல்ல மழை பெய்து இன்றைய பொழுது முழுதும் வெய்யில் அதிகம் உரைக்காத காரணத்தினால் குளுமையான சீதோஷ்ணம் வேறு சேர்ந்து கொண்டு அவரது அறிவுரைகளை கேட்டு பழைய விஷயங்களை நினைத்து சிரித்தபடி இருக்க முடிந்தது. பழைய நினைவுகள் ருசிக்கு இது. நா ருசிக்கு கையில் வந்து விட்ட பாவ் பாஜி தட்டு.

 

அடுத்து ஒரு ஹோண்டா ஆக்டிவாவில் இன்னொரு டை வாலிபன் (இவன் இரண்டு முதல் மூன்று வருட மருந்து விற்பனை பிரதிநிதி அனுபவம் உள்ளவன் என உடல் மொழி தெளிவாய் சொன்னது. என் ஜட்ஜ்மெண்ட் சரி என தொடர்ந்து ஒட்டு கேட்டது நிரூபித்தது) ‘அனுபவஸ்தன்’ வந்தவுடன் அந்த அறிவுரை கேட்ட வாலிபனிடம் இருந்து கொஞ்ச தூரம் விலகி நம்ம மேனேஜர் தன்னுடைய அடுத்த லெவல் அஸ்திரங்களை ஏவத் துவங்கினார். புதிய ரெப்க்கு அனுபவஸ்தனை ‘காய்ச்சுவது’ கேட்க கூடாது என்னும் பிம்பத்தை அனுபவத்திற்கும் அதே சமயம்நாளை உனக்கும் இது தான் என புதியவனுக்கும் ஒரே சமயத்தில் ‘தெளிய’ வைத்துக் கொண்டிருந்தார்.

 

என் நினைவு வழக்கம் போல் ஒரு பழைய சம்பவத்தை அசை போட ஆரம்பித்தது. அது 2003 ஆம் வருடத்திய மார்ச் மாதம். அப்போது நான் தஞ்சாவூரில் மெடிக்கல் ரெப்பாக குப்பை கொட்டிக் கொண்டிருந்தேன். மார்ச் வருடக் கடைசி மாதம் அதனால் பயங்கர அழுத்தம். மீட்டிங் போட்டு ஆர்.எம் (Regional Manager) மற்றும் ஏ.எஸ்.எம் (Area Sales Manager) இருவரும் ஒரு சனிக்கிழமை வறுத்தெடுத்தார்கள். தஞ்சை ‘சங்கம்’ (ஹோட்டலுங்க) காற்றழுத்த தாழ்வு மண்டலம் வந்தது போல் இருந்தது. (சரி ஒட்டு மொத்த ஹோட்டல் இல்லை, எங்க மீட்டிங் ஹால்)

 

மீட்டிங் முடிந்தது இரவு 10 மணிக்கு. பின்பு சக நண்பர்களுடன் அரட்டை என பேசி புது பஸ் ஸ்டாண்டில் வீட்டுக்கு திருச்சி செல்ல பஸ் ஏறிய போது அதிகாலை 3 மணி.

 

ஞாயிறு சோம்பலாய் எழுந்து காபி குடிப்பது முதல் காலை டிஃபன் வரை அனைத்தும் தாமதமாகவே செய்து வீட்டிலிருந்து வெளியே ரவுண்டுக்கு கிளம்பிய போது மணி 11.30. 

 

மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அரிஸ்டோ ஹோட்டல் டீக்கடைக்கு சென்று நண்பனுடன் அரட்டையை துவக்கினாலும் இயல்பாய் பேச முடியவில்லை. நண்பன் என்னைப் பார்த்து ‘என்னடா பேயறஞ்ச மாதிரி இருக்க’ என கேட்க கொஞ்சம் நேரம் மேலே, கீழே, இடம், வலம் என பார்த்து யோசிப்பது போல் டீயும் குடித்து முடித்து எல்லாவற்றையும் சொல்லி முடிக்க அவன் ‘அடப் போடா இது ஒரு மேட்டர்? ஃப்ரீயா விடு’ என்றான்.

 

அடுத்து அவன் வீட்டிற்கு போய் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்த போது அவன் ‘டேய் லேசா லேசா படப் பாட்டு கேட்கறியா’ என கேட்க நான் கடுப்புடன் அது தான் ஒரே ஒரு பாட்டு இருக்குற கேசட் ஒன்னு ரிலீஸ் செஞ்சாங்களே, ஏண்டா? என புலம்ப அவனோ ‘இல்லை டா முழு ஆல்பம் வந்தாச்சு’ என்றவுடன் மனசுக்குள் ஹாரிஸ் ஜெயராஜ் கொஞ்சம் உற்சாகத்தை ரத்த ஓட்டத்தில் பம்ப் செய்ய ஆரம்பித்தார்.

 

சரி குடு வீட்டுல கேட்டுட்டு கேசட் நைட் குடுக்கறேன் என அவனிடம் வாங்கி வீட்டுக்கு சென்று விட்டேன். வீட்டுக்கு போய் வாக் மேன் எடுத்து வீட்டுக்கு பின்னால் இருக்கும் எலுமிச்சை மரத்தடியில் சேர் போட்டு அமர்ந்து காதில் பாட்டை ஒலிக்க விட…

 

ஆஹா! கேட்க கேட்க மனம் எந்த ஒரு பிடிமானமும் இல்லாமல் ஒரு சந்தோஷ மனோ நிலைக்கு பறந்தது. இன்று வரை ஒரு விஷயம் பிடிபடாது இருப்பது ‘பாடல்கள்’ தான். அது எப்படி ஒரு மனிதனின் மனோ நிலையையே மாற்றுகிறது? குறிப்பாய் மூடு மாற்றிய அந்த பாட்டை அப்போது தான் முதலில் கேட்கிறேன்.

சரி மீண்டும் சென்னை : அந்த மேனேஜர் & புது ரெப் மருத்துவமனைக்குள் நுழைந்து விட நான் அந்த நினைவில் தொடர்ந்து கொஞ்சம் லயிப்பதற்காய் மொபைல் எடுத்து ஹெட் செட் மாட்டி ‘அந்தப் பாடலை’ ரிப்பீட் மோடுக்கு கொண்டு சென்று ரசிக்க துவங்கினேன்.

 

சில வருடங்களுக்குப் பிறகு நான் வசிக்கும் இந்த இடத்திலிருந்து (மெட்ராஸில் இருந்தாலும்) வேறு பகுதிக்கு குடி போகலாம் ஏன் வேறு ஊருக்கே மாற்றலாகலாம் ஆனால் வருடத்திற்கு ஒரு முறையாவது இதே இடத்திற்கு நான் வரக் கூடும். இந்த பாவ் பாஜி கடைக்கு வந்து சமோசா சாப்பிட்டபடி அங்கே சுழலும் காற்றில் நான் மிதக்கவிட்ட நினைவுகளை ஸ்வாசிக்கும் அனுபவம் வாய்க்க கூடும். இப்போது மெட்ராஸிலிருந்து திருச்சிக்கும் தஞ்சைக்கும் பயணித்து ஸ்வாசிப்பது போல்…  

 

பல சந்தர்பங்களில் ‘நிகழ் காலம்’ என்பது ‘கடந்த காலத்தை’ அசை போடுவதுதானே…

பாட்டு சொல்ல மறந்துட்டேன்

பாடல் : முதன் முதலாய்…

படம் : லேசா லேசா

படம் வெளிவந்த ஆண்டு : 2௦௦3

கொஞ்சம் டென்ஷனாக உணருகிறீர்களா? இந்தப் பாட்டை கேட்டபடி காலாற நடந்து செல்லுங்கள். என்ன கவலை, பாத்துக்கலாம் என மனம் கண்டிப்பாய் உற்சாகமாகும். இரண்டாவது சரணத்திற்கு முந்தைய BGM, அந்த ஹம்மிங்… உண்மையில் Euphoric Feel. நம்புங்க அதுக்கு நான் கியாரண்டி…                  

 

 

Leave a comment

1 COMMENT

LEAVE A REPLY