This article is done by Sathya Gp

 

எங்கே, எப்போது, யார் நம்மை உயிர்ப்பித்து உணர வைப்பார்கள் என்பதை நாம் அறியாமல் இருக்கலாம் ஆனால் சரியான சமயத்தில் காலம் நம்மை பக்குவப்படுத்திக்கொண்டு தான் இருக்கிறது. பக்குவம் அறிவதென்பது வேறு. அது சிக்கலானது.

 

தஞ்சை எனக்கு பூர்வீகம் என்றாலும். ஊர் பாசம் இருந்தும் ஊர் வாசம் அதிகம் உணராது சிறு வயது முதல் வளர்ந்தேன். வீடு, படிப்பு என அனைத்தும் வேறு நகரத்தில். கோயில், விசேஷம் போன்றவற்றிற்கு மட்டுமே பூர்வீகம் என்னும் அளவிலேயே வாழ்க்கை பயணிக்க 2002 ஆம் வருடம், தஞ்சையில் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்க்கும் கொடுப்பினை வாய்த்தது.

 

அப்போது நான் தங்கியிருந்த மேன்ஷன் அருகே உள்ள ஒரு சிறிய உணவகத்தில் பணியாற்றும் ‘தோசை மாஸ்டர்’ என்னுடைய ரசனை அலைவரிசைக்கு ஏற்றவாறு இருந்ததால் சிறிது நாட்களிலேயே ஆத்ம ஸ்நேகிதரானார். இரண்டு வருடங்கள் அவரிடம் இருந்து நான் கற்றது ஏராளம். ஞாயிற்று கிழமைகளில் நான் வீட்டிற்கு செல்லவில்லையெனில் அவருடன் பேசியே என் பொழுது சுவையாய் அர்த்தமுள்ளதாய் கழியும்.

 

இரண்டு வருடங்கள் தஞ்சையில் நான் பணிபுரிந்த காலகட்டங்களில் பல்வேறு கோவில்கள், அருகில் உள்ள கிராமங்கள், எந்தெந்த ஊரில் சுவையான சைவ உணவகங்கள் உள்ளது என பல்வேறு விஷயங்களை எனக்கு அறிமுகப்படுத்தி பழைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் என்னை பலமாக காலூன்ற வைத்தது அவர் என்றால் மிகையல்ல.

 

2004 ஆம் வருடம் சென்னைக்கு நான் குடும்பத்துடன் குடி வந்து இங்கேயே வேறொரு வேலையும் கிடைக்க என்னுடைய தஞ்சை ஜாகை உடல் ரீதியாக மட்டும் முடிவுக்கு வந்தது. சிந்தனை ஜாகை மாறுமா? சில நொடிகளில் பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவு பயணிக்கும் அதி விரைவு வாகனமாயிற்றே அது. 

 

சென்னைக்கு வந்து கடிதப் போக்குவரத்திலும், அலைபேசி பேச்சிலும் எங்கள் நட்பு தொடர்ந்தது. என்னுடைய பத்திரிகை தொடர்பான வேலையிலும் அவரின் உதவியும் பங்களிப்பும் இன்று வரை தொடர்கிறது. சென்னை வந்த பிறகு 4 முறை (தற்போதைய பயணமும் சேர்த்து) நான் தஞ்சை பயணித்து 2 முறை அவரைப் பார்க்க முடியாத நிலை (அவர் தன் சொந்த ஊருக்கு சென்றிருந்தார்) 1 முறை அவரைப் பார்த்து வழக்கம் போல் பேசிவிட்டு வந்தேன். பின்பு அலைபேசியில் பேசும் போது அவர் வேலை தொடர்பாக விசாரித்தால் நேரில் பார்க்கும் போது சொல்லுகிறேன் என ஏனோ தவிர்த்துவிடுவார்.

 

இந்த முறை தஞ்சை சென்ற உடனே அவரை அழைத்து பேச அவரும் தான் வேலை செய்யும் இடத்தின் முகவரி சொல்லி என்னை வருமாறு அழைத்தார். தஞ்சை போன முதல் நாளே மாலை 6 மணி வாக்கில் அவரைப் பார்க்க விரைந்தேன்.

 

அவர் வேலை பார்ப்பது ஒரு நடுத்தரமான சிற்றுண்டி மற்றும் தேநீர் கடை என சொல்லலாம். காலை 5 மணிக்கு தேநீர் மற்றும் காப்பியுடன் துவங்கி பின்பு 7 மணியளவில் டிபன் மற்றும் பலகாரங்கள் விற்பனை என வியாபாரம். மதியம் சாப்பாடு கிடையாது. மாலை 3 மணியளவில் பலகாரங்கள் தேநீர் காப்பி என துவங்கி இரவு 1௦.30 வரை கடை இயங்குகிறது.

நான் போனபோது மாஸ்டர் மிளகாய் பஜ்ஜி மற்றும் உருளை பஜ்ஜி என அசத்திக் கொண்டிருந்தார். எண்ணை சட்டியில் பரபரப்பாய் இருந்தார். என்னை பார்த்து பஜ்ஜி சாப்பிடுங்க சாம்பார், தேங்காய் சட்னி இரண்டும் உண்டு என சொல்லி தட்டில் வைத்தார். என்னை ‘அறிந்த’ அவர், வழக்கம் போல் கெட்டி சட்னி வைத்தார். கல்லாவில் இருந்த தன் முதலாளியிடம் ‘என் நண்பர்’ என ஆரம்பித்து 13 வருட நட்பை சுருக்கமாக எடுத்துரைத்து என்னை அறிமுகம் செய்து வைத்தார்.

 

கடை முதலாளி உடனே ‘அண்ணே நீங்க வேணா கல்லா கிட்ட வந்து அப்படியே தம்பி கிட்ட பேசுங்க, நான் எண்ணை சட்டியப் பாத்துக்கறேன்’ என அவர் சொல்ல ஏனோ அந்த நொடிப்பொழுதிலேயே எனக்கு “அந்த அண்ணனை” பிடித்துவிட்டது. மாஸ்டர், இல்லை இருக்கட்டும் ‘இப்படியே பலகாரத்தை கவனிச்சுகிட்டு பேசிக்கிறேன்’ என சொன்னார்.

 

பஜ்ஜி மளமள வென விற்க அடுத்து மாஸ்டர் கரைத்த கடலைமாவையும், உருளைக்கிழங்கு மசாலாவையும் எடுத்து வைத்து உருளை போண்டாவிற்கு ஆயத்தமானார். பத்தே நிமிடங்களில் போண்டா என்னை சட்டியில் வேகத் துவங்கியது. வெந்த போண்டாவை தட்டில் கிடத்திவிட்டு மாஸ்டர் “அண்ணனைப்” பார்த்து, ‘நான் போய் கவனிச்சுட்டு வரேன்’ என ஒரு போண்டாவை பேப்பரில் எடுத்து சுற்றி வைத்து நகர்ந்தார். 

 

நான் அண்ணனிடம் ‘மாஸ்டர் யாரை கவனிக்கப் போறாரு’ என வினவினேன். அண்ணன் உடனே ‘அந்த சின்ன பிள்ளையார் கோயில் பக்கத்துல உட்கார்ந்திருக்கார் பாருங்க அவருக்குத்தான்’ என ஒரு வயதான நரைத்த தாடியுடன் ஒடிசலான தேகத்தில் அமர்ந்திருந்த முதியவரை காண்பித்தார்.

 

மாஸ்டர் திரும்பி வந்தவுடன் நான் மாஸ்டரிடம் ‘ஏன் மாஸ்டர் போண்டா எடுத்த உடனே அவருக்குப் போய் குடுத்துட்டு வரீங்க’ என கேட்க மாஸ்டர் சிரித்தபடி அண்ணனைப் பார்த்து ‘நீங்களே சொல்லுங்க’ என்றார்.

 

அண்ணன் என்னிடம் ‘அவருக்குப் பசங்க எல்லாம் இருக்காங்க. அவர் சம்சாரம் இறந்து போய்ட்டாங்க. சம்சாரம் இறந்தவுடன் பசங்க விரட்டிட்டாங்க. சோத்துக்கு வழி இல்லாம இங்க வந்து உக்கார்ந்துட்டார். பசங்க எல்லாரும் நல்ல வேலைல ஒவ்வொரு ஊருல குடும்பத்தோட இருக்காங்க. இவரு பாடு திண்டாட்டம். எனக்கு மனசு கேக்கல, தினமும் காலைல முதல் டீ, முதல் மெது வடை, இட்லி வெந்தவுடன் முதல்ல 2 இட்லி, அதே மாதிரி ரெண்டு பூரி இப்படி எல்லாம் முதலில் அவருக்கு குடுத்துட்டுத் தான் வியாபாரம். மதியம் அவர் மூணு ரூபா கேட்பாரு குடுப்பேன். போய் அம்மா மெஸ்ல தயிர் சாதம் சாப்பிடுவாரு. திரும்ப சாயங்காலம் முதல் மெது போண்டா, உருளை பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி, வாழைக்காய் பஜ்ஜி, உருளை போண்டா அவருக்குத் தான். நைட் கடை மூடுறதுக்கு முன்னாடி ஒரு க்ளாஸ் பால். இது தினசரி நடக்குறது தான். நைட் நம்ம கடை வாசல்ல படுத்துப்பாரு. நானும் ஒரு பாட்டிலில் தண்ணீ குடுத்துட்டு வீட்டுக்கு போயிருவேன்’ என்றார்.

நான் ‘அண்ணே, உங்க வீடு’?

 

‘எனக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு என்ன பெத்தவங்க போய் சேர்ந்துட்டாங்க என் சம்சாரமும் ஒன்னும் சொல்ல மாட்டா. எங்க வீட்டுல இருங்கன்னு சொல்லியும் அவரு கேக்கல தம்பி. நான் என்ன செய்ய’? என்றார்.   

 

‘என்னமோ போங்க பசங்களுக்கு எப்படித்தான் பெத்தவங்களை நடுத்தெருவுல விட மனசு வருதோ’ என்றேன்     

 

இவரு சின்ன வயசுல போடாத ஆட்டமா? குடிச்சுட்டு அந்த அம்மாவைப் போட்டு அந்த அடி அடிப்பாரு அவங்க நகை நட்டு எல்லாம் குடிச்சே அழிச்சாரு. கெட்ட சகவாசம் வேற, அந்தம்மா கஷ்டப்பட்டு பசங்களை படிக்க வைச்சு ஆளாக்கினாங்க. அவங்க உயிரோட இருந்த வரை அவரு வயிறு காயல. அவங்க கண்ணை மூடினாங்க. பசங்க அவருக்குத் திருப்பி குடுக்குறாங்க. பாவம் அவர் வயசு’? என குரல் கம்மி அண்ணன் சொல்வதை என்னால் உணர முடிந்தது.

 

எனக்கு எனோ அந்த “கிழவரைப்” பார்த்து இரக்கம் வரவில்லை. என் ‘உணர்வுகள்’ அதை உணர விடாமல் தடுக்கிறது போலும்.

 

11 வருடங்களுக்கு முன் மாஸ்டர் தான் எனக்கு ஒரு எழுத்தாளரை அறிமுகப் படுத்தினார். அவரின் முதல் படைப்பை என்னிடம் கொடுத்து வாசிக்க வைத்து … இன்று அந்த எழுத்தாளரின் எழுத்து ரசிகன் நான்.

 

சரியாக 11 வருடங்களுக்குப் பிறகு மாஸ்டர் எனக்கு அறிமுகப்படுத்தியவரை? என்ன சொல்ல…

 

மறக்காமல் “அண்ணனிடம்” அவரது செல்போன் நம்பரை வாங்கிக் கொண்டு புறப்பட்டேன்.                                                  

                                                                                                      – சத்யா GP

Leave a comment

LEAVE A REPLY