Idly was a south indian dish. It is a importent tiffien in Tamilians houses. Here the author share his tastier memories about that delcious dish.This article is written by Parimelalagan Pari.

 

‘பட்டூரா’ என்றழைக்கப்படும் நீண்ட வடிவிலான பூரி மூன்று, கொஞ்சம் எண்ணெய் மினுமினுப்புடன் ரைஸ் புலாவ் ஒரு கப், வெண் சுண்டல் மசாலா இரண்டு கப், கீரை மசியலில் கன சதுர வடிவ உருளைக்கிழங்குத் துண்டுகள் மிதக்கும் ஆலு பாலக் சப்ஜி ஒரு கப், ஒரு மசாலா அப்பளம், இரண்டு துண்டுகள் எலுமிச்சை ஊறுகாய், வெள்ளரி, முட்டைக்கோஸ், பெரிய வெங்காயம், கேரட் துண்டுகள் கலந்த ஸலாட் ஒரு கப், தயிர் ஒரு கப், காஃபி, ஒரு பெரிய மாம்பழம், ஒரு சிறிய ஆப்பிள்… இவை மட்டும்தான் அன்று இரவு ஹாஸ்டல் டின்னரில் விதிக்கப்பட்டிருந்தது. சாப்பிட்டுவிட்டு சரி, கொஞ்சம் மழை நேர மும்பையை வேடிக்கை பார்த்துவிட்டு வருவோம் என்று இருப்பதிலேயே சுமாரான – என்னது, எல்லாமே சுமார்தானா? – சரி, இருப்பதிலேயே மிகவும் சுமாரான ஜீன்ஸையும், டி-ஷர்ட்டையும் போட்டுக் கிளம்பினேன். ஆகம விதிகளின்படி ரெய்ன் கோட் அணியக்கூடாதாம், வேதம் படித்த மச்சினி சொல்லி இருக்காப்ல. குடைதான் பாதுகாப்புக் கவசம். மும்பை மழைக்குக் குடை எல்லாம் நாய்க்குடை அளவுதான். எப்படியும் முக்கால்வாசி ஜீன்ஸ் நனையத்தான் போகிறது. மொபைலைப் பாலித்தீன் கவரில் போட்டு, மழைக்கேற்ற ஸாண்டல் டைப் காலணிகளுடன் கைப்புள்ள கட்டை வண்டியில் கிளம்பியாச்சு. கூடவே வருவது நீங்கள்.

ரிஸர்வ் வங்கியின் எதிரெதிர் இரட்டைக் கட்டிடங்களும் மழைக் கம்பிகளில் குளித்துக் கொண்டிருந்தன. வாகனப் போக்குவரத்து மிகவும் குறைந்திருந்த சாலைச் சந்திப்புக்களிலும் அபாரக் கடமை உணர்ச்சியுடன் சிவப்பு, பச்சை, மஞ்சள் விளக்குகள் கடமை ஆற்றிக் கொண்டிருக்க, தள்ளுவண்டியில் வாழைப்பழங்கள் நனைந்தபடியே விற்றுப்போய்க்கொண்டிருந்தன. பெஸ்ட் பஸ்களில் கண்டக்டரும், டிரைவரும் மட்டுமே இருந்தார்கள். கண்ணாடிக் கதவு இருட்டுச் சிவப்பு வெளிச்சத்திற்கு அப்பால் பார்களில் கூட்டம் புகை மண்டலத்துடன் அம்மியது. 

ப்ளாட்பார வியாபாரிகளைப் ப்ளாட்பாரத்திற்கே கொண்டுவந்து விட்டிருந்தது மழை. வெளி நாட்டினர் டாலர்களில் பர்ச்சேஸ் செய்யும் கொலாபா சாலை இருபுறமும் வெறிச்சோடிக் கிடந்தது. தடிமனான பாலித்தீன் உறைகளால் மூடிக் கட்டப்பட்டிருந்த ப்ளாட்பாரக் கடைகளின் மீது மழைத்துளிகள் வன்மமாக அறைந்து அறைந்து சிதறின. கேட் வே ஆஃப் இண்டியா வாயிலை முழுவதுமாகப் பார்க்க இயலாத விரக்தியில் சுற்றுலாக் கூட்டம் ரீகல் தியேட்டர் உச்சியில் கட்டப்பட்டிருந்த பிரம்மாண்ட ஃப்ளெக்ஸில் வித்யா பாலனின் ஸெடக்டிவ் பார்வையையும், ரத்தச் சிவப்பு ஆரஞ்சுச் சுளை உதடுகளையும் பார்த்து ஆறுதல் அடைந்து கொண்டிருந்தார்கள். ‘பாக்தாதி’ ரெஸ்ட்டாரண்ட் முகப்பில் கொழுத்த கோழிகள் சிவப்பு உடம்புடன் நிர்வாணமாக நெருப்பு ஜூவாலைகளில் மசாலாக் கலவை படிந்து இறுக இறுக வெந்துகொண்டிருந்தன. 

முடிவில்லாமல் நீர் பீய்ச்சிக்கொண்டிருக்கும் ஃபவுண்டன் வட்டம் கடந்து, காலியாக ஏஸியில் உறைந்திருந்த ஏடிஎம்களைத் தாண்டி, நாஞ்சில் சம்பத் பரிசுப் ப்ராண்ட் கார் ஒன்று விசிறி அடித்த மினி சுனாமிச் சீற்றத்திலிருந்து மயிரிழையில் தவ்வித் தப்பி, சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் முகப்பில் மறுபடியும் அவரைப் பார்த்தேன்.

முன்பொரு சமயம் சற்றுத் தள்ளி இதே பகுதியில் பார்த்தவர்தான். தலைச்சுமையாக இட்லி வியாபாரம். அகன்ற பிரம்புக்கூடையில் பெரிய இட்லிப் பாத்திரம், இரண்டு சிறிய பாத்திரங்களில் முறையே தேங்காய்ச் சட்னி மற்றும் தக்காளிச் சட்னி, காகிதத் தட்டுக்கள், ப்ளாஸ்டிக் ஸ்பூன் அடங்கிய பாலித்தீன் பை, சாப்பிட்ட தட்டுக்களைச் சேகரிக்க இன்னொரு பை. இவ்வளவுதான் அவர் ஆஸ்தி. 

மூன்று இட்லிகள் பத்து ரூபாய்தான். சாம்பார் கிடையாது. கட்டுப்படியாகாது என்பதை விட அந்தக் காகிதத் தட்டில் பரிமாறுவது கடினம். சட்னிகள் கெட்டியாக பெரியகுளத்தில் மனைவி கையால் சாப்பிட்ட வீட்டுச் சாப்பாட்டை நினைவுபடுத்தும். இதே சாலையில் கொஞ்சம் தள்ளி ‘ஷிவாலா’ ரெஸ்ட்டாரண்ட் போனால் இரண்டு மொக்கை இட்லிகள் அறுபது ரூபாய்தான். சாம்பார் இனித்துத் தொலையும். எக்ஸ்ட்ராவாக ஒரு கப் சட்னி கேட்டால் அதற்குப் பதினைந்து ரூபாய் ஸைட் டிஷ்ஷாகத் தீட்டிவிடுவார்கள் தீட்டி. இங்கு அந்தப் பிரச்சினை இல்லை. எவ்வளவும் சாப்பிட்டுக் கொள்ளலாம்.

இன்று அவரைப் பார்த்தபோது மூடிக்கிடந்த ஒரு ஃபோட்டோ லேப்பின் வாசல் படிக்கட்டில் இட்லிகள் பரிமாறிக்கொடிருந்தார். இரண்டுபேர் சாப்பிட்டுக் கொண்டிருக்க, ஒரு மீட்டர் தூரம் தள்ளி மழைத் தாரைகள் கடையின் கூரையிலிருந்து குறு அருவிகளாக வழிந்துகொண்டிருந்தன. பனிப்புகையும் கொஞ்சம் போனஸாக பெண்களின் இடை போல வளைந்து நெளிந்தது.

எனக்கொரு கெட்ட பழக்கம் என்னவென்றால், எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் இட்லியைப் பார்த்துவிட்டால் குறைந்தபட்சம் இரண்டாவது சாப்பிட்டே ஆக வேண்டும். இப்போதும் அப்படியே. அட இந்தக் குட்டி வெண்மை அமிர்தத்திற்கு முன் பட்டூராவாவது, பாலக்காவது. ஒரு ப்ளேட் இட்லி கேட்டேன். அவர் பாத்திரத்தைத் திறந்தபோதுதான் கவனித்தேன், உள்ளே சுமார் அரைவாசிக்கும் மேலே இட்லிகள் மீதம் இருந்தன. மனம் துணுக்குற்றது. ஹூம், மழையின் மானாட மயிலாட ஆட்டம் இது. நாள் முழுதும் வெயிலே இல்லாமல் மழை, மிதமான மழை, உரத்த மழை, சற்று உரத்த மழை, தூறல் என்று பொழிந்துகொண்டிருந்தால் அப்புறம் நடமாடும் வியாபாரிகளுக்கு எங்கிருந்து பிழைப்பு நடத்த இயலும்?

சாப்பிட்டுவிட்டு இன்னொரு ப்ளேட் இட்லி. பசியே இல்லாமல் சாப்பிடும் ஒவ்வோர் இட்லியும் அடுத்தவர் இட்லிதான். இருந்தாலும் கம்யூனிஸத்தோடு கொஞ்சம் எகனாமிக்ஸையும் பார்க்க வேண்டுமே? அப்புறமும் இருபது ரூபாய்தான் பில். ஐம்பது ரூபாய் கொடுத்துவிட்டுப் பின் முப்பது ரூபாய்க்குப் பார்ஸல் செய்யச் சொன்னேன். எங்கள் சமையலறையில் குக்கிங் ரேன்ச் எனப்படும் ஹை பவர் மின் அடுப்புகள்தான் பயன்பாட்டில் உள்ளன. ஒவ்வொரு அடுப்பிலும் அலமாரி போல ஒரு திறப்பு இருக்கும். அதனுள் எப்போதும் கொஞ்சம் வெப்பம் கனன்றுகொண்டிருக்கும். அதனுள் வைத்துவிட்டால் காலையில் மறுபடி இட்லி ப்ரேக் பாஸ்ட் செய்யலாம். சட்னியை ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டால் போயிற்று. ஏதோ அவரின் இழப்பு கொஞ்சமாவது குறையுமே.

பார்சலைக் கையில் தரும்போது மெலிதாகச் சிரித்தார். ‘ஹ, தெரியும்டா உங்க சமூக சிந்தனை’ என்பதுபோல் அவர் கண்கள் கிண்டலுடன் பார்த்தன. தயக்கத்துடன் நான் ஆரம்பிப்பதற்குள் அவரே சொன்னார் : ‘… அதொண்ணும் பிரச்சினை இல்லை ஸார்…வீட்ல நாளைக்குச் சமைக்க மாட்டோம்… தெரிஞ்ச ஹோட்டல் இருக்கு… அதெல்லாம் தொழில் ரகசியம்…’ என்று உரக்கவே சிரித்தவர் ‘… ரெண்டு மாசம்தான் ஸார்… அப்புறம் மழை விட்டுடும்… அதுவரைக்கும் வேற வேலைக்குப் போக வேண்டியதுதான்… பரவாயில்லை ஸார்… நாம எப்படியும் பொழச்சுக்கலாம்… ஆனா மழை பெய்யணும்… பெய்யட்டும்…’ என்றவரின் கண்கள் அனிச்சைச் செயலாக வானம் பார்த்தன.

திரும்பி நடந்தபோது இதயம் கனத்திருந்தது. அனேகமாக மழைக்காலம் முடியும்வரை நான் அவரை மறுபடி பார்க்கப் போவதில்லை. குடைக்கம்பி விளிம்பிலிருந்து காற்றினால் திசைமாறிக் கண்ணில் பட்டுக் கன்னத்தில் வழிந்தது எனக்கே எனக்கான ப்ரத்யேகமான மழைத்துளி ஒன்று. உலகத்துக்கான மழை இருளைக் கிழிக்கும் நியான் விளக்குகளின் ஒளியைக் கிழித்தபடி உரத்துப் பொழிந்துகொண்டே இருந்தது.

அன்று உண்ணா நோன்பு ஆரம்பிக்கும் ரமலான் பண்டிகைத் துவக்க நாளாம். மாஷா அல்லாஹ்!  

 

  by பரிமேலழகன் பரி

Leave a comment

LEAVE A REPLY