This song is shared to us by Sathya Gp

 

நன்றாக நினைவிருக்கிறது. வருடம் 2009, மாதம் அக்டோபர். அப்போது நான் ஒரு தனியார் வங்கியில் பிஸ்னஸ் பேங்கிங் பிரிவில் மேலாளராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். பொதுவாய் மாத இறுதி நாட்களில் (எப்படியும் 5 நாட்கள்) எங்களுக்கு வேலை அதிகமாக இருக்கும். ஏனெனில் அந்த மாதத்தின் இலக்கை எட்ட வேண்டுமென்பதற்காக அப்படி உழைத்து தான் ஆக வேண்டும். அந்த சமயத்தில் வங்கியின் பேனல் வழக்கறிஞர் அலுவலகம், வேல்யுவர் (அசையா சொத்துகளின் மதிப்பை வங்கிக்காக கணக்கிடுபவர்) அலுவலகம் போன்றவையும் எங்களால் இரவு 9 மணி வரை இயங்கும். எங்கள் வங்கியின் அலுவலகம் (back office) இருந்தது தி.நகரில். சொத்து மதிப்பை கணக்கிடுபவரின் (Bank Panel Valuer) அலுவலகம் இருப்பது வளசரவாக்கத்தில். நான் இரவு 7.30 மணியளவில் அவர் அலுவலகம் சென்று ஒரு ரிப்போர்ட் வாங்கி சரி பார்த்து திருத்தி இறுதியாய் சரியான ரிப்போர்ட்டை வாங்கிக் கொண்டு கிளம்பும் போது இரவு மணி 9.15. வீட்டிற்கு (வழக்கம் போல்) போன் செய்து வீடு திரும்ப தாமதமாகும் என்பதை தெரிவித்து, வெளியில் சாப்பிட்டுக் கொள்வேன் என தகவல் சொல்லிவிட்டேன்.

 

அந்த காலகட்டத்தில் என்னுடைய பழக்கமே இரு சக்கர வாகனத்தில் பயணிக்கத் துவங்கினாலே பண்பலையை ஒலிக்க விட்டபடி பாட்டு கேட்டுக் கொண்டே பயணிப்பது. (அப்போது இந்த அளவுக்கு பண்பலையில் விளம்பரங்கள் இல்லை) வடபழனி சிக்னலில் பச்சைக்காக காத்திருக்கும் போது ஒரு பாட்டு ‘டேய் உனக்கு இது பிடிக்கும் டா’ என மனதுக்குள் பச்சை விளக்கை துளிர்க்க வைத்தது. ஆம் அந்தப் பாடலை அப்போது தான் முதலில் கேட்கிறேன், ஏனோ உடனே மனதில் பதிந்துவிட்டது. கேட்டு முடித்தபின் வேறு சிந்தனையே இல்லை. அந்தப் பாடல், பாடல், பாடல் மட்டுமே…

 

தி. நகர் அகஸ்தியர் கோயில் அருகில் இருக்கும் அந்த ரோட்டோர கடையில் சாப்பிடும் போதும் (என்ன சுவை, பொடி தோசை அபாரம். காரில் செல்பவரிலிருந்து சாதாரண நடை ராஜாக்கள், ஏன் பெண்களும் சகஜமாக தட்டை கையில் வைத்துக் கொண்டு ரோட்டில் சங்கோஜமின்றி சாப்பிடும் அனைவருக்கும் பொதுவான உணவகம் அது. கனவாய்ப் போனது போல் போக்குவரத்தை காரணம் காட்டி தற்போது அகற்றப்பட்டுவிட்டது) அந்தப் பாடல் மட்டும் மனதுக்குள் அதிகபட்சமாய், பாடல் வரிகள் நினைவினுள் முழுமையாக குடிபோகாததால் நனனானா… என மெல்லிதாய் உதட்டிலும் முணுமுணுத்தபடி…

 

அலுவலகம் வந்தவுடன் என்னுடைய மேலதிகாரி என்னிடம் ‘எல்லாவற்றையும் முடித்து டாகுமெண்டேஷன் கிட் (கடன் தொடர்பாக வாடிக்கையாளர் தன் கையெழுத்திட்டு வங்கிக்கு சமர்ப்பிக்கும் ஆவணங்கள் அடங்கிய கோப்பு) தயார் செய்துட்டு கிளம்புங்க எவ்வளவு நேரம் ஆனாலும் எனக்கு போன் செய்து தகவல்சொல்லுங்க’ என சொல்லி தன்னுடைய வேலைகள் முடித்து கிளம்பும் போது மணி இரவு 11.30. அவர் போகும் போது என்னுடன் சேர்ந்து வேலை பார்க்கும் என் நண்பருக்கும் கொஞ்சம் உதவும்படி சொல்லி கிளம்பி போய்விட்டார்.

 

நான் நண்பரிடம் ஒரு டீல் பேசத் துவங்கினேன். ‘மச்சி, உன்னோட வேலை என்ன பெண்டிங் இருந்தாலும் நான் உதவறேன், எனக்கு நீ இந்தப் பாட்டை மட்டும் எப்படியாவது டவுன்லோட் செஞ்சு என் மொபைலில் ஏத்தி குடுன்னு சொல்ல, உடனே அவரும் யார் யாரிடமோ செல் பேசிவிட்டு’ என்னிடம் ‘அரை அவர் வெயிட் பண்ணு மச்சி, பாட்டோட வரேன்’ என சொல்லி கிளம்பினார். நான் வழக்கம் போல் கம்ப்யூட்டர் மற்றும் பிரிண்ட்டரில் மூழ்கி இருக்க, சொல் தவறாது முப்பத்தி இரண்டாவது நிமிடத்தில் (லிப்ஃட் ஏறி மூணாவது தளம் வரணும்ல!) வந்து என்னைப் பார்த்து சிரித்தபடி கட்டை விரலை உயர்த்திக் காட்டினார். (அவரும் எங்க ஊர்க்காரர் ஆச்சே!) மொபைலில் பாடல் பகிர்ந்து கொள்ளப்பட்டாலும் என்னால் உடனே கேட்க முடியவில்லை. காரணம் : வேலைப்பளு (உண்மையான காரணம், பொதுவாய் எனக்கு மொபைலில் பாடல்களை லவுட் ஸ்பீக்கரில் வைத்துக் கேட்க பிடிக்காது சரியான ஆடியோ எஃபக்ட்டில் கேட்டால் தான் திருப்தி) வேலை எல்லாம் முடித்து நாங்கள் கிளம்பும் போது மணி அதிகாலை 3.35 (பிரும்ம முகூர்த்த வேளை) எங்கள் அலுவலகம் அருகில் ஒரு கால் சென்டர் ஆஃபிஸ் உண்டு அதன் வாசலில் உள்ள ஒரு டீக்கடை 24 மணி நேரமும் திறந்திருக்கும். அங்கே சென்று ‘டீயும்’ குடித்து விட்டு நான் நண்பரிடம் விடைப் பெற்றுக் கொண்டு கிளம்பினேன். (மேலதிகாரிக்கு போன் செய்ய அவர் ஏழாவது ரிங்கில் எடுத்து, விசாரித்து ‘கிரேட்யார், குட் நைட் ஹஹா சாரி குட் மார்னிங்’ சொல்லி முடித்தார்) நான் மெதுவாக ஹெட்ஃபோனை காதில் பொருத்தி அந்தப் பாட்டை ரிப்பீட் மோடில் வைத்துவிட்டு வண்டியில் பயணிக்கத் துவங்கினேன். என்னுடைய பழக்கமே பிடித்த பாடலை ரீப்பீட் மோடில் வைத்து பல முறை கேட்பது. நந்தனம் சிக்னல் தாண்டும் போதும் அதே பாட்டு சைதாப்பேட்டை கடக்கையிலும் அதே பாட்டு, கிண்டியில் எப்போதும் திறந்திருக்கும் அந்த டீக்கடையில் டீ குடித்துவிட்டு மீண்டும் வீடு போய் சேரும் வரை அதே பாட்டு.

 

இந்த சம்பவம் நடந்து சரியாக நான்கு வருடங்களுக்குப் பிறகு (இப்போது சுய தொழில்) ஒரு க்ளையண்ட் பார்க்க ரயிலில் விசாகப்பட்டினம் பயணம். இரண்டாம் வகுப்பு ஏசி. பாந்தமாய் குளிர் காற்று வெளியே வெயிலே இல்லை. கண்ணாடி சாளரம் வழியாய் நம் கண் முன் வேகமாய் கடக்கும் வயல்வெளி. இருந்த போதும் மனம் அந்த க்ளையண்ட் போனில் பேசியதும், சிக்கலான பேலன்ஸ் ஷீட் குறித்தும் யோசித்தபடி இருந்தது. என்னமோ திடீரென சீட்டில் இருந்து எழுந்து வெளியே கதவின் அருகில் நின்று வேடிக்கை பார்த்தபடி மீண்டும் என் செல்லை இயக்கி அந்தப் பாட்டை ஹெட் ஃபோன் துணையுடன் ஒலிக்க விட்டு பயணிக்க கண் முன் அந்த இயற்கை பரவசமும், முகத்தில் அறையும் காற்றும் இதமான சீதோஷ்ண நிலையும் காதில் ரீங்காரமாய் அந்த மயக்கும் பாடலும் மனதை மிதக்க வைத்து லேசாக்கி சாந்தப்படுத்தியது. நிச்சயம் இதற்கு மேல் அந்த உணர்வை விவரிக்க முடியாது. உணர்ந்தால் தான் உணர முடியும் (இறை பக்தி போல்).

 

கடினமாய் உடல் வருந்தி உழைத்து களைத்துப் போனால் தானாக கண் கெஞ்சி நம்மை உறங்க வைக்கும். நன்றாக 6 மணி நேரம் அசதி தீர தூங்கி எழுந்தால் உடல் சகஜ நிலைக்குத் திரும்பிவிடக் கூடும் ஆனால் மூளை களைக்க உழைத்தால் உடனடியாக தூக்கம் வருமா? சந்தேகமே. அத்தகைய தருணத்தில் மூளை சாந்தமான பின் தான் (mental relaxation) நாம் உறங்கி ஓய்வெடுக்க முடியும். அதற்கு இதுபோல் பாடலில் லயிப்பது உன்னதம்.

 

நான் இன்னும் அந்தப் பாடல் பற்றி தகவல் சொல்லாமல் …

 

பாடல் : மழை பெய்யும் போதும் நனையாத யோகம்…

படம் : ரேணிகுண்டா    

                                                                                                           by – சத்யா G.P

 

                                                                                                                                                                                                                                                                 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

GP                                            

Leave a comment

LEAVE A REPLY