வருடம் 2௦௦4. சென்னைக்கு பல முறை வந்திருந்தாலும் நிரந்தர ஜாகை என்பதாகிப் போனது அந்த வருடத்தில் தான். புதிய இடம், பரிச்சயப்படாத சூழல், ஆரம்ப ஆச்சரியங்கள் எல்லாம் கடந்து சென்னையும் பழகிய வளையத்துக்குள் வர ஆரம்பித்து விட்ட காலம்.

 

என் வீட்டிற்கு அருகே உள்ள அண்ணாச்சி கடையில் தான் வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் வாங்குவோம். மளிகை மட்டுமா? காலைப் பால் பாக்கெட், காய்கறிகள் எல்லாம் அண்ணாச்சியிடம் தான். அவரை செல்லமாய் நக்கல் அடிக்கும் போது நான் சொல்வது ‘எங்க ஊருல அண்ணாச்சி காலைல 5.30 மணிக்கு கடை திறந்துருவாப்டி, ஃபிரஷ் காய் அப்போவே வாங்கலாம். பால் பாய் காலைல 5 மணிகெல்லாம் பால் பாக்கெட் போட்டு போயிருவாரு. ஆக 6 மணிக்குள் எல்லாம் முடிஞ்சுரும் ஆனா இங்க? கடை திறக்கவே 6.30 நீங்க காயெல்லாம் அடுக்கி வெச்சு 7 மணிக்கு முன்னால காய் வாங்க முடியல என்னமோ போங்க’ என சொன்னால் அவர் சிரித்தபடி அதுக்கென்ன செய்ய? நான் காய் வாங்கிட்டு வரணும் பொறவு தான் கடை திறக்க முடியும் ஆனா பால் வெள்ளன வந்துருமே? உங்களுக்கு வேணும்னா இதோ இந்தப் பெட்டிய கவர் போட்டு மூடி இருப்பேன் நீங்க கவர் விலக்கி எடுத்துக்கிடலாம். பொறவு கடை திறந்து காசு குடுக, உங்க காசு எங்கே போவும்’ என்பார். நானும் சில நாட்கள் அவ்வாறு செய்திருக்கிறேன்.

 

பொதுவாக முதல் டோஸ் காபி குடிக்க அம்மா கொஞ்சம் பால் ஃபிரிட்ஜில் எப்போதும் வைத்திருப்பார் ஆதலால் எங்கள் வீட்டிற்கு பிரச்சனை இல்லை. ஒரு ஞாயிறு காலை 5.30 மணி வாக்கில் அம்மா கேட்டதால் பால் வாங்க அண்ணாச்சி கடைக்கு போகும் போது நான் அந்த காட்சியைப் பார்த்தேன். எங்கள் வீட்டிற்கு அருகாமையில் குடியிருப்பவர் அவர். என்னைப் போல் அவரும் நடுத்தர வர்க்கம் தான். அவருக்கு அழகான 2 குழந்தைகள். ஒரு பெண் மற்றும் ஒரு ஆண். (பெண் பள்ளிக்கூடம் போவாள் போல UKG என நினைக்கிறேன், பையன் 1 வயசு நிரம்பிய குழந்தை) அவர் சுற்றும் முற்றும் பார்த்தபடி அண்ணாச்சி கடையை நெருங்கி ஒரு பால் பாக்கெட்டை எடுத்து மீண்டும் நாலா புறமும் பார்த்துவிட்டு விறுவிறு வென நடக்கத் துவங்கினார். நான் சடாரென அவர் பார்வைக்கு படாமல் மறைந்து கொண்டேன். அவரும் படபடப்பு குறைந்து தன் வீடு நோக்கி நடக்கத் துவங்கினார். நான் பால் பாக்கெட் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று விட்டேன். ஏனோ மனம் படபடப்பாகவே இருந்தது.

 

7.30 மணி வாக்கில் அண்ணாச்சி கடைக்கு சென்று காய்கறி வாங்கி காசு கொடுக்கும் போது (இன்று வரை ஏன் அப்படி செய்தேன் என காரணம் தெரியவில்லை) ‘அண்ணாச்சி, 2 பால் பாக்கெட்டுக்கு காசு எடுத்துக்கோங்க’ என சொல்லி காய்கறிகளுக்கும் சேர்த்து பணம் கொடுத்துவிட்டு வந்தேன்.

 

காலை 10 மணி போல் அண்ணாச்சி கடைக்கு டாட்டா சால்ட் வாங்கப் போன போது அந்த நபர் யாரிடமோ தன் நோக்கியா 1100 துணையுடன் பேசிக் கொண்டிருந்தார். அண்ணாச்சி டாடா சால்ட் கொடுத்து ‘என்ன விசேஷம் 2 பால் பாக்கெட்டு வாங்கி இருக்கீக, பாயசமா? காலைல 5.30 மணிக்கே வாங்கிட்டீக, அம்மா சமையல் ஆக்கியாச்சா’ அவர் கேட்ட உடனே ‘அந்த நபர்’ பதறியபடி என்னைப் பார்க்க, என்னையறியாமல் நானும் அவரைப் பார்த்தேன். சில நொடிகளில் சொல்லி வைத்தாற்போல் இருவரும் பார்வையை வேறு பக்கம் திருப்பியபடி நகர்ந்து விட்டோம்.

 

அடித்தட்டு மக்கள் தினசரி கஷ்டம் அனுபவிப்பவர்கள், அது அவர்களின் வாழ்வில் ஒரு அங்கம். அதே போல் மேல் தட்டு வர்க்கத்தினரின் நெருக்கடிகளெல்லாம் கோடிகளில் இருப்பதால் அவர்களுக்கு பொதுவாய் அன்றாட வாழ்க்கை சிக்கல்கள் இருக்காது ஆனால் நடுத்தர வர்க்கம்? உடுத்தும் உடையிலிருந்து, செல்போன், 2 வீலர் இப்படி இருந்தாலும் கையில் பணம் இல்லாமல் அதுவும் ஒரு பால் பாக்கெட் வாங்கக் கூட முடியாமல்… என்னால் உணர முடியும், அம்மா செய்து கொடுத்த வடகம், வற்றலை விற்று வந்து அதன் பின் அம்மா மார்கெட் சென்று மொத்தமாய் காய்கறிகள் வாங்கி வருவார். சில சமயம் ரெகுலராக வத்தல் வாங்குபவர்களிடம் முன் பணம் வாங்கி வந்து… அந்த சூழலிலும் நான் பட்டினி கிடந்ததில்லை ஆனால் அம்மா…

 

இந்த மனிதருக்கு கைக் குழந்தை வேறு. சரியாக மூன்றே தினங்களில் எனக்கு தென் மாவட்டங்களில் புது ப்ராடக்ட் அறிமுகம் என அலுவல் நெருக்க, சரியாக 4௦ நாட்கள் வீட்டில் இல்லை. வேலை முடித்து வீடு திரும்பி 2 நாள் சோம்பலாய் உண்டு உறங்கி கழித்த பின் தான் ‘சுறுசுறுப்பு’ மீண்டு(ம்) வந்தது.

 

அண்ணாச்சி கடைக்கு சென்று டீத்தூள் வாங்கும் போது திடீரென நினைவு வந்தவனாய் ‘அண்ணாச்சி, அந்த யமஹா 135 வண்டி வெச்சுருப்பாரே அவரு எங்க? என வினவ…

 

‘அவருக்கு கொஞ்சம் பணமுடை, பாத்த வேலையும் தங்கல முருகன் புண்ணியத்துல வெளிநாட்டுல வேலை கிட்டி போய்டாப்ல, வீம்பெல்லாம் ஒதுக்கிபுட்டு சம்சாரத்தையும் புள்ளைங்களையும் தன் மாமியார் வீட்டுல விட்டுட்டு கிளம்பிட்டார். முருகன் கண்டிப்பா காப்பாத்துவான்’

——

2013 டிசம்பர் மாத வாக்கில் ஒரு க்ளையண்ட் மீட்டிங் – அதற்கு கெருகம்பாக்கம் பயணம். வண்டியை மதனந்தபுரம் (போரூர்) கடக்கும் போது அந்த பஸ் ஸ்டாப் அருகில் இருக்கும் அந்த சிறிய டீக்கடையில் நிறுத்தி (வழக்கமான டீக்கடை, இஞ்சி டீயில் அவரை அடிச்சுக்க முடியாது) நலம் விசாரித்து… அப்போது இன்னொரு வண்டி கடை முன் நிற்க… அவரை பார்த்தவுடன் அந்த நபர் என்னைப் பார்த்து சிரித்தார். நானும் சிரித்தேன். 9 வருடங்களுக்கு முன்பு நான் குடியிருந்த வீட்டிற்கு பக்கத்தில் இருந்தவர் தான். பல முறை பார்த்த முகம். பரிச்சயம் தான் ஆனால் அதிகமாய் பேசியதில்லை. ஏன் பேசியதே இல்லை என்பது தான் சரி.

அந்த நிகழ்வைப் பற்றி அவர் எதுவும் பேசிவிடக் கூடாது என மனம் படபடத்தது. அவர் கண்களை கூர்ந்து பார்த்தால் அவருக்கும் அதே மனோ நிலை என்பதை உணர முடிந்தது.

 

ஆனால் அந்த டீக்கடை சந்திப்பும், டீ, பலகாரம் அனைத்தும் அந்த நிகழ்வின் தொடர்ச்சியாய், பதிலாக நிறைவுற்றதோ எனத் தோன்றுகிறது… ஆம் என்னிடம் இயல்பாகப் பேசினார். பாத்து ரொம்ப வருஷம் ஆச்சுல?

 

ஆமா, இங்க தான் இருக்கீங்களா?

 

ஹ்ம்ம் துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி கோயில் பக்கத்துல, பையன் ஸ்வாமி ஸ்கூல்ல படிக்கிறான். வடை சாப்பிடுங்க. பிஸ்கெட் சாப்பிடுங்க…

 

வடை, பிஸ்கெட், டீ என ‘எல்லாம்’ முடிந்து கிளம்பும் தருணம் பாய்ந்து டீக்கடைகாரரிடம் பர்சில் இருந்து பணம் எடுத்துக் கொடுத்தார். எவ்வளவு ஆச்சுங்க?

 

2 டீ – 12 ரூபா

4 வடை – 20 ரூபா

2 பிஸ்கட் – 4 ரூபா

‘எல்லாம்’ சேர்த்து 60 ரூபா.

 

1௦௦ ரூபாய் கொடுத்து கடைக்காரரிடம் 4௦ ரூபாய் மீதம் பெற்றார். என்னைப் பார்த்து மீண்டும் சிரித்தபடி ‘வரேங்க, வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா? அம்மாவை கேட்டதாக சொல்லுங்க.

 

என்னை சிலையாக்கிவிட்டு அவர் புறப்பட்டுவிட்டார்.

 

‘இன்றைய தினத்தில் ஏன் எனக்கு கெருகம்பாக்கம் கஸ்டமர் மீட் தகைய வேண்டும்? நான் ஏன் அந்த டீக்கடையில் வண்டியை நிறுத்த வேண்டும்? குறிப்பாய் அந்த நபரை சந்திக்கும் சூழல் ஏன் அமைய வேண்டும்? அதை விட அவர் ஏன்…

 

யதேச்சையான நிகழ்வுகள் என புறத் தோற்றம் ஆனால் சூட்சமம் யார் அறிவார்? என் சிற்றறிவுக்கு பிடிபடவில்லை அந்த குன்றத்தூர் மெயின் ரோடு, மதனந்தபுரம் பேருந்து நிலையத்தில் அமர்ந்தபடி அமைதியாய் கவனித்தபடி இருக்கும் அந்த பிள்ளையார் அறிந்திருக்கக் கூடும். ஏன் அவரே இந்த விளையாட்டை விளையாடி இருக்கக் கூடும். 

 

                                                                                                               – சத்யா GP 

 

 

 

Leave a comment

1 COMMENT

LEAVE A REPLY