அது 1995 ஆம் வருட கால கட்டம். ஆகஸ்ட் மாதம் என நினைவு. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலகட்டம். எப்போதும் போல மாலை கிரிக்கெட் விளையாட கிளம்ப அம்மாவும் அக்காவும் மார்க்கெட் கிளம்பி கொண்டிருக்க நான் அம்மாவிடம் ‘வீட்டை பூட்டிட்டு போங்க மா, நான் 8 மணிக்கு தான் வருவேன். நீங்க போயிட்டே வந்துருவீங்க’ என சொல்ல அம்மா தலையசைத்தபடி கிளம்பினார். நான் என்னுடைய வழக்கமான கோரிக்கையை அம்மாவிடம் மீண்டும் நினைவூட்டினேன் (அந்த ‘கேசட்’ வந்துருச்சுன்னா SVK ல வாங்கிடுங்க மா)

 

உடல் களைக்க களைக்க மைதானத்தில் குதியாட்டம் போட்டு விளையாடி முடித்து பிள்ளையார் கோயில் அருகில் இருக்கும் அடிபம்பில் நண்பர்கள் அனைவரும் மினி குளியல் போட்டோம். (மினி குளியல் என்பது ஒரு நண்பர் அடி பம்பில் தண்ணீர் அடிக்க மற்றவர் கை கால் கழுவி முடித்து அப்படியே உடையுடன் தண்ணீரை மேலே வாங்கி கொள்வது, அடுத்து அரை மணி நேரம் அரட்டை அடிக்கும் போதே ஈரம் காய்ந்துவிடும்)

 

தெரு முனையில் நின்றபடி வழக்கம் போல் தாதா (கங்குலி), டெண்டுல்கர், திராவிட் என ஆக்ரோஷமாய் பட்டி மன்றம் நடத்தி விட்டு வீட்டுக்குள் நுழைய அம்மா என்னைப் பார்த்து சிரித்தபடி ‘வாடா நான் வந்து அரை மணி நேரம் ஆச்சு, காய்கறியெல்லாம் பங்கிட்டு ஃபிரிட்ஜ் ல எடுத்து வெச்சாச்சு, உனக்காக வசந்த பவன் மசால் தோசை ரெடியா இருக்கு, முகம் கை கால் கழுவிட்டு சாப்பிடு, உனக்காக கேசட் போடாம வெச்சுருக்கேன், உங்க அக்கா திட்டறா’ என சொல்ல… மனம் சந்தோஷத்தில் பறக்க துவங்கியது.

 

அடுத்த 15 நிமிடங்கள், அனைத்தும் மின்னல் வேகத்தில்… சாப்பிட்டு அம்மாவிடம் கேசட்டை பாய்ந்து வாங்கி டேப்பில் ஒலிக்க விட, A சைடு முதல் பாட்டே ‘ஆஷா போஸ்லே’ அம்மா பாடிய செம கேட்ச்சி நம்பர். அப்படியே A சைட் முடிந்து B சைடு ஒலிக்க ஆரம்பிக்க… அந்தப் பாடலும் ஆஷா அம்மா பாடியது தான்.

 

மனசுக்குள் நிரந்தரமாய் தங்கி பைத்தியம் கொள்ள வைத்தது. அந்தப் பாட்டு முடிந்த பின் மற்ற பாடல்கள் கேட்கவே இல்லை மீண்டும் மீண்டும், என் நினைவுக்கு எட்டியவரை சுமார் 26 முறை கேட்டிருப்பேன். சொல்ல முடியாத ஒரு ‘யூபோரிக்’ (Euphoric) உணர்வு.

 

குறிப்பாய் இரண்டாம் சரணத்திற்கு முந்தைய அந்த BGM :

நாம் பொதுவாக சற்று தொலைவில் நமக்கு வேண்டிய நண்பரை முதலிலேயே பார்த்து விட்டு வேறு எதையோ பார்த்துக் கொண்டும், யோசித்துக் கொண்டும் இருப்பது போல் படம் காட்டிக் கொண்டிருப்போம். நண்பர் அருகில் வந்து ‘டேய், எப்படி டா இருக்க மாப்ள’ என கேட்டவுடன் மனதினுள் தேக்கி வைத்திருந்த உற்சாகத்தை வெளிப்படுத்துவோம் பாருங்கள்… மிதக்க வைக்கும் உன்னதம் அது.

 

இதைப் படித்துவிட்டு இப்போது அந்த BGM ஐ ஒரு முறை கேளுங்கள். அந்த இசைக் கலவை உங்களை மிதக்க வைத்து உணரவைக்கும்…

 

ஆம் அந்த இசைக் கலவை ஆரம்பிக்கும் போது வயலின் வாத்தியக் கருவியில் துவங்கி பல சங்கதிகளை மென்மையாய் தொட்டு வரும் ஆனால் BGM முடியும் முன்பு வரிகள் ஆரம்பிப்பதற்கு முன்பாக மிக சரியாக அந்த பாடல் முழுதும் ஒலிக்கும் அந்த குறிப்பிட்ட இசை கலவையான விட்டு விட்டு ஒலிக்கும் புல்லாங்குழல் இசையும் அதனூடே பயணிக்கும் ட்ரம்ஸ் தாளக்கட்டும் மீண்டும் இசைக்க ஆரம்பிக்கும்.

 

இன்னும் பாடலை சொல்லவில்லையோ?

 

பாடல் : Tanhaa Tanhaa Yahan Pe Jeena…

படம் : Rangeela

படம் வெளிவந்த ஆண்ட

20 வருடங்கள் கடந்தும் நெஞ்சை விட்டு நீங்காத மற்றுமொரு ரஹ்மானின் அற்புதமான பாடல்.       

 

    நினைவுகளில் நீந்தியவர்      சத்யா GP 

 

Leave a comment

1 COMMENT

LEAVE A REPLY