முழுமுதற் கடவுளாக கருதப்படும் விநாயகரின் பிறந்தநாள், விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியன்று, தமிழகத்தில் வீடுகளில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரின் சிலைகளை வைத்து பூஜை செய்கிறார்கள். பிள்ளையாருக்குப் பிடித்தமானது கொழுக் கட்டை எனப்படும் மோதகம். விநாயக சதுர்த்தியன்று இந்த மோதகத்தை தயாரித்து, அதனுடன் பல்வேறு இனிப்புப் பண்டங்களையும் நவேதனமாகப் படைப்பார்கள்.
பொது இடங்களில் அந்தந்தப் பகுதிகளில் விநாயகரின் பெரிய சிலைகளை பொது இடங்களில் வைத்து பூஜை செய்கிறார்கள். தானியங்கள், அருகம்புல் உள்பட பல்வேறு பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படும் மிகப் பெரிய சிலைகள் கருத்தைக் கவரும்.
விழாவின் கடைசி நாளான ஆனந்த சதுர்த்தசியன்று, இச்சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலிலோ பெரிய நீர் நிலைகளிலோ கரைப்பார்கள். விநாயக சதுர்த்தி நம் நாட்டின் பல பாகங்களில் பல விதங்களில் கொண்டாடப்படுகிறது. உத்திர பிரதேசத்தில் பெண்கள் விரதம் இருந்து சந்திரனைப் பார்த்த பிறகே சாப்பிடுகிறார்கள். கர்நாடகத்தில் இது கௌரி கணேசஹப்ப என்று கொண்டாடப்படுகிறது. வழிபாட்டு முறைகளில் மிகச் சிறிய வேறுபாடுகளைத் தவிர, நாடு முழுவதும் படையல்கள் மற்றும் ஊர்வலங்கள் ஒரே மாதிரியாக இருக்கும்.
பிள்ளையாருக்கு யானைத்தலை எப்படி வந்தது

பார்வதிதேவி களி மண்ணால் ஒரு சிறுவனின் உருவத்தைச் செய்து வாசலில் நிறுத்தி, அதனிடம் நான் குளிக்க உள்ளே போகிறேன். யார் வந்தாலும் வீட்டிற்குள் விடாதே எனக் கூறி விட்டுச் சென்றார். சற்று நேரத்திற்குப் பின் சிவபிரான் வரவே, களிமண்ணாலான அச்சிறுவன் அவரைத் தடுத்து உள்ளே போக விடவில்லை. அதனால் கோபம் கொண்ட சிவபிரான் அச்சிறுவனின் தலையைக் கிள்ளி எறிந்து விட்டார். குளித்து விட்டு வந்த பார்வதி தான் காவலுக்கு வைத்த சிறுவன் தலை இல்லாது இருப் பதைக் கண்டு கண்ணீர் வடித்தார். உடனே வடக்கே தலை வைத்து உறங்கும் விலங்கின் தலையைக் கொண்டு வர உத்தரவிட்டார் சிவபிரான். ஆனால் யானை மட்டுமே வடக்கில் தலை வைத்து படுத்திருந்ததால், அதன் தலையைக் கொண்டு வந்து பிள்ளையாருக்குப் பொருத்தி உயிர்பெறச் செய்தனர்.
பிள்ளையாரின் தலை பற்றிய இன்னொரு கதை

 பார்வதி விநாயகரைப் பெற்றதும், தன் குழந்தையை ஆசீர்வதிக்கும்படி அனைத்து தேவ, தேவதைகளுக்கும் அழைப்பை அனுப்பினாராம். தேவர்கள் வந்து பிள்ளையாரை ஆசீர்வதித்தார்கள். ஆனால் சனீஸ்வரன் மட்டும் வரவில்லை. பார்வதி அவரை வரவழைத்து தன் மகனைக் கண்டு ஆசீர்வதிக்கும்படிக் கூறவே அவரோ நான் யாரைப் பார்த்தாலும் அவரது தலை வெடித்துவிடும். அப்படி ஒரு சாபம் எனக்குக் கிடைத்திருக்கிறது. அதனால் உங்கள் மகனைக் கண்டு ஆசி கூற முடியாது என்றார்.பார்வதியோ அதெல்லாம் இல்லை. நீங்கள் என் மகனைப் பார்த்து ஆசீர்வதியுங்கள் என்றாள். அவரும் வேறு வழியின்றி பிள்ளையாரைப் பார்த்தார். மறு விநாடியே பிள்ளையாரின் தலை வெடித்து சுக்கு நூறாகியது. அதனால் பிள்ளையாருக்கு யானையின் தலை பொருத்தப்படவே பார்வதிதேவி ஆறுதல் அடைந்ததாகக் கூறப்படுகிறது.

இல்லந்தோறும் நடக்கம் இனிய பூஜை! 

வீடுதோறும் களி மண்ணால் செய்த பிள்ளையார் சிலைகளை வண்ணக் குடையுடன் வாங்கி வந்து, எருக்கம் பூ அணிவித்து, அருகம்புல், செவ்வந்தி, மல்லிகை, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்வது வழக்கம். ஐங்கரனுக்கு விருப்பமான கொழுக்கட்டை, அப்பம், சுண்டல், வடை, அவல், பொரி என நிவேதனங்கள் செய்கிறோம். வாழை, திராட்சை, நாவல், விளாம்பழம், கரும்புத் துண்டுகள், ஆப்பிள் என மிகவும் பிரியமுடன் தும்பிக்கையானுக்கு அளிக்கிறோம். அறிவு தெளிந்த ஞானம் முதலிவற்றை அளித்து எடுத்த செயல்கள் தடைவரா வண்ணம் காத்தருள வேண்டுகிறோம்.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா! என்று ஒளவையார் பாடியது போல் இறைவனை வாழ்வில் நலம் பெற வேண்டி நிற்கின்றோம். மறுநாள் புனர் பூஜை என்று சொல்லப்படும், சிறு பூஜை செய்து, நல்ல நேரம் பார்த்து, பிள்ளையார் சிலைகளை எடுத்துச் சென்று கிணற்றிலோ, குளத்திலோ, ஆற்றிலோ விட்டு விடுவது வழக்கம்.இவ்வாறு ஆண்டுதோறும் நாடெங்கும், ஏன் உலகெங்கும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

விரதம் இருக்கும் முறை

விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் எழுந்து காலைக் கடன்களாகிய உள்ளத்தையும் உடலையும் சுத்தம் செய்த பின்பு விநாயகரை மனம் உருகப் பிரார்த்தனை செய்ய வேண்டும். சூரியன் உதிக்கும் வரை எந்த உணவையும் உட்கொள்ளாமல் விநாயகரை நினைத்திருந்து என் சங்கடங்களை நீயே தீர்க்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பூஜையைத் தொடங்க வேண்டும்.
 
முதலில் விநாயகர் பூஜை செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு விநாயகரிடம் நான் என்னுடைய சதுர்த்தி விரதத்தை முறைப்படி அனுஷ்டிக்கப் போகிறேன். எனவே நீ எந்தவித தடைகளும் இல்லாமல் அருள்புரிய வேண்டுகிறேன் என பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். பின் தங்கத்தாலோ அல்லது தாமிரத்தாலோ அல்லது படத்திலோ விநாயகர் செய்து பூஜை செய்ய வேண்டும்.
 
விதிமுறைப்படி நெய், சர்க்கரை, எள் சேர்த்த கொழுக்கட்டைகளைத் தயாரித்து கொண்டு விநாயகருக்கு நிவேதனம் செய்ய வேண்டும். மேலும் தரித்திரம் நீங்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் காலணி, குடை, பசு மாடு ஆகியவற்றை சக்திக்கேற்றவாறு தானம் செய்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.
 
இவ்வாறு பூஜை செய்து வந்தால் விநாயகப் பெருமான் கட்டாயம் வேண்டிய வரங்களைத் தருவார். விநாயகர் சதுர்த்தியை மிகவும் சிரத்தையுடன் கடைபிடிப்பவர்கள் சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும், பிள்ளைப் பேறும் துன்பங்கள் விலகி இன்பமும் பெறுவார்கள்.
 
காரிய அனுகூலமும் உண்டாகும். இடையூறு விலகும். பெரும் புகழுடன் சகல நோய்களும் நீங்கி, சகல பாக்கியங்களுடன் வாழ்வார்கள். விநாயகர் விரதத்தை ஸ்ரீகற்பக விநாயகர் வீற்றிருக்கும் பிள்ளையார்பட்டியிலும் மற்றும் திருவலஞ்சுழி (கும்பகோணம்), உப்பூர் (ராமநாதபுரம்), ஈச்சனாரி (கோயம்புத்தூர்) ஆகிய இடங்களில் செய்யலாம்.
 
சிலர் இந்த இடங்களில் விரதத்தை தொடங்கியும் அதே இடங்களில் நிறைவு செய்வதும் உண்டு. இவ்வாறு செய்ய இயலாதவர்கள் அவரவர் ஊர்களில் உள்ள கோவில்களிலும், வீடுகளிலும் விரதத்தை கடைபிடிக்கலாம். எங்கு விரதம் இருந்தாலும் அதற்கேற்ற பலன் உண்டு.

 

 

Leave a comment

LEAVE A REPLY