கண்ணன் ஒரு சேட்டைக்கார குழந்தை.குறும்புக்கார காதலன்.நல்வழி காட்டும் ஆசான்.தந்திரம் புரியும் தாத்ரேயன்.அடைக்கலம் தரும் பரம்பொருள்.கண்ணனை விரும்பாத மனமும் உண்டோ…? கண்டவர் மனம் மயக்கும் அந்த கள்வனின் பிறந்ததினம் இன்று.பத்துமாதம் தாங்கிய பிள்ளைக்கு ,காதல் களிப்பூட்டிய காதலனுக்கு ,பாடம் பயிற்றுவித்த ஆசானுக்கு ,எனக்குள் அடங்கி விடு என சிரிக்கும் தெய்வத்திற்கு ….இப்படி விதம் விதமாய் அவன் பிறந்ததினத்தை கொண்டாட ஆசை தோன்றுகிறது.

இதோ மனம் மயக்கும் அம்மன்னவனின் கதை…..

எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் பூமியில் தலையெடுக்கிறதோ அப்போதெல்லாம் நான் தோன்றுவேன். கொடியவர்களை அழித்து பக்தர்களைக் காப்பதற்காகவும், தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவும் யுகம்தோறும் அவதரிப்பேன், என்பது கீதைநாயகன் கிருஷ்ணரின் அருள்வாக்கு. இப்படியொரு நிலையைச் சீர்படுத்துவதற்காக துவாபரயுகத்தில் அவர் அவதரித்தார்.

images

தர்மநெறிதவறி நடந்த கொடிய அரசர்களிடம் இருந்து உலகைக் காப்பதற்காக குரு÷க்ஷத்திர யுத்தத்தை நடத்தினார். மகாபாரதம் என்னும் மகத்தான இதிகாசத்தில் இவருடைய வரலாறு இடம்பெற்றுள்ளது. முழுமுதற்கடவுளாகிய மகாவிஷ்ணுவே கிருஷ்ணராக வசுதேவரின் மகனாகப் பிறந்தார்.

யதுகுலத்தின் தலை வனான சூரசேனன் மதுராநகரை ஆட்சி செய்து வந்தார். அவரது மகனான வசுதேவர், தேவகர் என்பவரின் மகளான தேவகியை திருமணம் செய்து மகிழ்ச்சியில் திளைத்தார். தேவகியின் ஒன்று விட்ட சகோதரன் கம்சன். அவன் மகாகெட்டவன். உக்கிரசேனன் என்பவரின் மகன். தந்தையையே கொடுமைப்படுத்தியவன். ஆனால், தங்கை தேவகி மீது அன்பு கொண்டவன். அவன் புதுமணத்தம்பதியரை தேரில் அழைத்துக் கொண்டு வீதியில் வந்து கொண்டிருந்தான். அப்போது, ஆகாயத்தில் அசரீரி ஒலித்தது.

மூடனே கம்சா! உன் சகோதரிக்கு தேரோட்டிச் செல்கிறாயே! அந்தத்தங்கையின் எட்டாவது பிள்ளை உன்னைக் கொல்லப் போகிறான்! என்றது.

images (2)

கோபமடைந்த கம்சன், தங்கை என்றும் பாராமல் தேவகியைக் கொல்ல வாளை எடுத்தான்.  வசுதேவர் அவனிடம், கம்சா! உன் தங்கையால் உனக்கு ஒரு கெடுதலும் நேராது. அவளுக்குப் பிறக்கப்போகும் குழந்தைகளை உன்னிடமே ஒப்படைத்து  விடுகிறேன். அவர்களை நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள்!, என்று வாக்களித்தார்.

சமாதானமடைந்த கம்சன் அவர்கள் இருவரையும் சிறையில் அடைத்தான். அவர்களுக்குப் பிறந்த ஆறு குழந்தைகளை கம்சன் தன் கையாலே கொன்றழித்தான்.

பரம்பொருளான மகாவிஷ்ணு, ஏழாவது கர்ப்பத்தை வசுதேவரின் இன்னொரு மனைவியான ரோகிணியின் வயிற்றில் வளரச் செய்தார். அவரே, பலராமராக ஆயர்பாடியில் பிறந்தார்.

மகாவிஷ்ணு, எட்டாவது குழந்தையாக ஆவணி மாதம் அஷ்டமி நாள் நள்ளிரவில் வசுதேவர், தேவகி தம்பதியருக்கு குழந்தையாகப் பிறந்தார். அதே நேரத்தில் விஷ்ணுவின் மாயசக்தியான அம்பிகை, ஆயர்பாடியில் வசித்த நந்தகோபனுக்கும், யசோதைக்கும் மகளாகப் பிறந்தாள். வசுதேவரின் ஆத்ம நண்பராக விளங்கியவர் நந்தகோபன்

. குழந்தை பிறந்ததும், விஸ்வரூபம் எடுத்து தேவகி, வசுதேவர் தம்பதியருக்கு தெய்வீக வடிவத்தைக் காட்டியது. நான்கு கைகளிலும் சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை மலர் ஒளிவீசின.மஞ்சள்நிறப் பட்டாடை, ஸ்ரீவத்சம், கவுஸ்துபமணி ஆகியவையும் அவருக்கு அழகு செய்தன. சிறையில் இருந்த தேவகியும், வசு தேவரும் பரம்பொருளே தங்களுக்குப் பிள்ளை யாகப் பிறந்திருப்பதை அறிந்து மகிழ்ந்தனர்.

அவர் வசுதேவரிடம், தந்தையே! என்னை ஆயர்பாடிக்கு எடுத்துச் செல்லுங்கள். உங்கள் நண்பர் நந்தகோபரின் மனைவி யசோதைக்குப் பிறந்த யோக மாயா என்னும் பெண் குழந் தையை இங்கு கொண்டு வந்து விடுங்கள், என்று கட்டளையிட்டு,தன் தெய்வீகக்கோலத்தை மறைத்து,சாதாரணக் குழந்தையாக மாறினார். அப்போது சிறையின் கதவுகள் தானாகத் திறந்தன. காவலர்கள் தூக்கத்தில் ஆழ்ந்தனர். தனக்கு பிறந்த கண்ணுக்கு கண்ணான கண்ணனைத் தூக்கிக் கொண்டு வசுதேவர் ஆயர்பாடிக்குக் கிளம்பினார்.

அப்போது பலத்த மழை பொழிந்தது. ஆதிசேஷன், குழந்தை நனையாதபடி குடையாக வந்து நின்றார். யமுனை ஆறு இரண்டாகப் பிளந்து வழி விட்டது. அதை எளிதில் கடந்த வசுதேவர், நந்தகோபன்மாளிகையில் கண்ணனை ஒப்படைத்து விட்டு, யோகமாயாவை எடுத்துக் கொண்டு மதுரா வந்து சேர்ந்தார். கம்சன் குழந்தையைக் கொல்ல உள்ளே வந்தான்.images (3)

பெண் குழந்தை பிறந்துள்ளதை எண்ணி ஏமாந்தான். ஏனெனில், ஆண் குழந்தையால் மட்டுமே அவனுக்கு அழிவு ஏற்படும் என்பது அசரீரி வாக்கு. இருப்பினும், சந்தேகத்துடன் அந்தப் பெண் குழந்தையின் கால்களைப் பிடித்து சுழற்றி வானில் வீசினான். அவள் காளியாய் மாறி, உன்னைக் கொல்லப்பிறந்த கண்ணன் ஆயர்பாடிக்கு சென்று விட்டான், என்று எச்சரித்து மறைந்தாள். இவ்வாறு அநியாயத்தை ஒழிக்க அவதரித்த கண்ணன் பிறந்த நாளையே கிருஷ்ண ஜெயந்தி என்று கொண்டாடுகிறோம். இந்நாளில் பாகவதம், பகவத்கீதை ஆகியவற்றை பாராயணம் செய்து பூரண அருள் பெறுவோம்.

images (4)

எவ்வாறு வழிபட வேண்டும்: பொதுவாக குழந்தை கிருஷ்ணனுக்கு விருப்பமான பட்சணங்கள், வெண்ணெய், பால், திரட்டுப்பால், பழங்கள் ஆகியற்றை வைத்து, கிருஷ்ணன் காலடி வரைந்து வழிபடுவதே எங்கும் சகஜமாக இருக்கிறது. அறிவாற்றல், நற்புத்தி, நேர்மை, சமயோஜித புத்தி ஆகியவற்றின் மொத்த வடிவமான பகவானை வழிபட்டு அவர் காட்டிய கீதை வழி நடக்க முயற்சிப்பதே இப்பண்டிகையின் தத்துவார்த்தம்.

Leave a comment

LEAVE A REPLY